Friday, January 3, 2014

சின்ன நெடுங்கூர்

ஐந்தாம் வகுப்பின் அரையாண்டுத்தேர்வு முடிந்தது. இனி விடுமுறை நாட்களை
எவ்வண்ணம் கழிப்பது என்ற சிந்தை யுடனே ...கையில் அம்மா கொடுத்த
முறுக்கொன்றை வைத்து, சுவைத்து .. இலங்கை வானொலியில் தமிழ்த் திரைப்
பாடல்களை ஆனந்தமாய் ரசித்து் கொண்டிருந்தேன். வெளிக்கதவில் தாழ்ப்பாள்
தட்டப் படும் ஓசை கேட்டு திரும்பிப் பார்க்கிறேன்...முகத்தில் ஒரே பரவசமாய்
ஓடோடிச் சென்று கதவைத் திறந்தேன்... அங்கே என் தாத்தா ...தலையில் முண்டாசு
கட்டிக் கொண்டு, முக்கால் கைச் சட்டை ஒன்று தொளதொளவென்று அணிந்து,
கணுக்கால் ஏறிய நான்கு முழ வேட்டி ஒன்று கட்டிக் கொண்டு... நின்று
கொண்டிருந்தார்.. அதே வேகத்தில் திரும்பி...’அம்மா ! தாத்தா
வந்திருக்கிறார் ...’ என்று அடுப்படிக்கு ஓடோடிசென்றேன். அம்மாவுடன்
திரும்ப வருவதற்குள் அவர் பட்டசாலையில் ஒரு பெஞ்சில் அமர்ந்து தன்னை
ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார். ‘வான்னா.. ‘ அம்மா கொங்குத் தமிழில்
விளிக்க.. ஆமாம்...அப்பாவை அன்று அப்படித்தான் அழைப்பார்கள். பிசிறான
ஒருவித கரகரத்த குரலில் அவர்... ‘விட்டலாபாயி ..! புள்ளைங்களுக்கு பரீட்சை
முடிஞ்சிருக்கும்.... கிணற்றில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும்போது
அவர்களுக்கு நீச்சல் கற்றுத் தரனும்....கூட்டிட்டு வாங்கன்னு
...தங்கம்மா...( எங்கள் அம்மாயி பெயர் )சொல்லி அனுப்பிசிருக்கா’...
அதுக்கேண்ணனே...இன்னிக்கு பரீட்ச முடிஞ்சுது நாளைக்கு கூட்டிட்டுப்
போங்க..’ என்று சொல்லி ஒரு சொம்பு நிறைய மோர் ..அவருக்கு பருக அம்மா கொண்டு
வந்து கொடுத்தாங்க.

மறுநாள் சாக்குத்துணியில் தைத்திருந்த அந்தக் காலப் பைக்கட்டில் எனது, என்
தங்கை, என் அண்ணன் மூவரின் துணிகள் திணிக்கப் பட்டு நானும் தங்கையும்
தாத்தாவின் கைகளைப் பற்றிக் கொண்டு பஸ்ஸ்டாண்டு சென்றோம்...எங்கள் ஊர் ஒரு
குக் கிராமம் , சின்ன நெடுங்கூர் காணும் ஆவலில். கரூரிலிருந்து கோவை
செல்லும் மார்க்கத்தில் 12 வது கல் அதாவது மைல் தொலைவில் அந்த ஊர் உள்ளது.
மணி நேரம் காத்துக் கிடந்து ஒரு வழியாய் பஸ்பிடித்து பயணித்து.. காருடையாம்
பாளையம் ஒத்தக் கடையில் இறங்கினோம். இனி எதிர்புறம் தெரியும் விலக்கில் (
பாதை பிரிவு ) இறங்கி நடக்க வேண்டும் பஸ்  நகரவும் சிறு பிள்ளைகளும், பருவ
மங்கையரும் ஓடி வந்து அது நின்றிருந்த இடத்தில முகம் குனிந்து ....அந்த
பெட்ரோல் வாசத்தை முகர்ந்து சந்தோஷப்பட்டனர். அன்று அவை எல்லாம் புதியதின்
தாக்கங்கள். அந்த வயசிலும் நாங்கள் இந்த அப்பாவித்தனத்தை எண்ணி ரசித்தபடியே
பிரிவுப் பாதையில் இறங்கி நடக்கலானோம். பாதை இருமருங்கிலும் உயரம் குறைவான
கருவேல மரங்கள். எண்ணி எடுத்தாற்போல் கண்களில் தெரியும் வளர்ந்த பனை
மரங்கள் ! சிவப்பு நிறம் மேவிய மண்ணில் சரி போட்டியாகக் கூழாங்கற்கள்
பரவலாகக் கிடந்தன. வானம் , மேகம் காணாத உயரத்தில் , ஒரு வெட்ட வெளியில்
நீருக்கு ஏங்கும் மணற்பரப்பில் எங்கள் நடைப் பயணம் தொடர்ந்தது. வானம்
பார்த்த பூமியில் மழை குறைவு.  ஆங்காங்கே ஆட்டுப் பட்டிகளைக் கடந்து, ,
பத்துப் பதினைந்து வீடுகளே உள்ள ஒரு சிற்றூரைக் கடந்து...பாதை வளைந்து
வளைந்து நீண்டது. ஏதோ சில பறவைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பறந்த
நிலையில்....அதோ ! சிறிய பிள்ளையார் கோயில் கோபுரக் கலசம் கண்ணில்
தெரிகிறது. எதிர்புறத்தில் ஊருக்குப் பொதுவான பெரிய உரலில் மூன்று
உலக்கைகள் மாறி போட்டு சில பெண்கள் சோளம் குத்துகின்றனர். ஒரு மச்சு
வீடு..., ஓரிரு ஓட்டு வீடுகள்.. மற்றவை பனை ஓலை வேய்ந்த குடிசைகள்... ஆனால்
அவை சாணம் தெளித்து வைக்கப் பட்ட பெரிய உள்முற்றங்கள் கொண்டவை. சுற்றுப்
புறச் சுவர் மணற்கலவையால் எடுக்கப் பட்டவை... இதோ காட்டாறு ஓடிய
தடத்தைக் கடந்தாயிற்று.. இடது பக்கம் ஆள் அரவமே காணாத தூரத்திற்கு
ஆவாரங்காடு....வலது புறம் பெரிய அரசமரம்,சற்று தள்ளி பவுதியாயி அம்மன்
கோயில், அதையொட்டி காட்டாறு பாய்ந்த தடத்தில் வளைவுகளுடன் சிறு சிறு
மணற்திட்டுகள். வீடும்  நெருங்கிற்று. பொதுக் கிணற்றில் குடிக்க நீர் எடுக்கும் சில பெண்மணிகள்  ...விசாரணைக் கணைகள் எங்களிடம்... ‘ஆயா,
ஆயா...மீனாக்ஷி கோனாரு பேரன் பேத்தி எல்லாம் வர்ராங்க..!’ சின்ன அம்மணி என்ன
படிக்குது ? உங்க ஆயா என் இங்கே வரமாட்டேங்குது..?’ நீதான்  கோயமுத்தூர்ல படிச்ச
பொண்ணா...’ இனி நீ அடுத்து பெரிய மனுஷியாயிடுவ போல இருக்கே
!’......இத்யாதி...இத்யாதி...எல்லாத்துக்கும் புரிஞ்சும் புரியாமலும் பதில்
சொல்லிட்டு ..வீட்டினுள் நுழைந்தாயிற்று. உள் வாசல் அம்மாயி சாணம் போட்டு
நேர்த்தியாக தெளித்து பளிச்சென்று வைத்திருந்தது. இடது பக்கம் சீமை ஓடு
வேய்ந்திருந்த வீடு.. செங்கற்சுவரால் ஆனது... கம்பிக்கதவு போட்டது.
எதிர்புறம் தகரத்தால் வேய்ந்திருந்த அடுக்களை..வலது புறம் பனைஓலை வேய்ந்து
சுண்ணாம்புக் கலவையால் மெத்தியிருந்த கொட்டம். எங்களுக்கு அதுதான்
பட்டாசாலை.ஒரு கயிற்றுக் கட்டில்...அதுதான் சோபா..அடுப்படியில் ஒரு பெஞ்ச்
அதுதான் சாப்பாட்டு மேசை. கொட்டத்துப் பரணில் பெரிய அளவிலான தாழம்பூக்
குடை... மடக்க முடியாதது...வட்ட வடிவம் உள்ளது... ஆனால் அழுத்தமாய்...என்றோ
ஒருநாள் பெய்யும் மழைக்காக. அடுத்து ஒரு பெரிய ..பக்குவப் படுத்தப் பட்ட
சுரக் குடுக்கை. நாங்கள் நீச்சல் கற்றுக் கொள்ளப் பயன்படுவது.

அம்மாயி எங்களைப் பார்க்கவும் கதைகள் பல கேட்டு ..சின்ன அம்மாயி .நன்கு
மனமுள்ள பருப்பும், நெய்யும் போட்டுப் பிசைந்த பூப் போன்ற மலர்ந்த
சாதத்தைப் பிசைந்து , வதக்கிய கத்திரிக்காய்க் கூட்டுடன் எங்களுக்கு
ஊட்டினார். இனி எங்களது தேடுதல் வேட்டை ஆரம்பம். பின்புற வாசலுக்கு பசு மாடு
பார்க்கச் சென்ற அண்ணன் கேட்டது..தாத்தா !! ‘ இது என்ன ரண்டு
வெள்ளாடுகள்.. ‘ ஒன்றுமில்லை ஜானகிராமா! ஆட்டுப்பால் நல்லது எனக்கு
...என்று வாங்கிக் கட்டினேன்... சொல்லி சிறிது பால் கரந்தும் குடிக்கக்
கொடுத்தார்.. நாங்கள் சைவம் மட்டும் எடுப்பவர்கள். பிறகு சிறுமியர் எங்கள்
பார்வையில் ... கோபால் பல்பொடி பாக்கெட், ரெமி பவுடர்,சாந்து  பொட்டு, கண்மை
.... கையில் எடுத்துக் கொண்டு தாத்தா இதல்லாம் இங்கு கிடைக்குதா... தங்கை
கேட்கிறாள்.. அதோடு...’ சினிமா நட்சத்திரங்களின் அழகு தாரகை சோப்பு ...
லக்ஸ்... எங்கள் முகத்தில் புன்முறுவல்.. ‘ செகு...( ஜெகதாம்பாள் பேரின்
செல்லச் சுருக்கம் )நீங்கல்லாம் வர்றீங்கன்னு முந்தா நாள் பரமத்தி
சந்தையில் போ’’ய் வாங்கி வந்தேன்.’ இதைக் கேட்கவும் என் உள்ளம்
இளகியது..அந்த ஊருக்கு இன்னும் ஐந்து மைல் செல்ல வேண்டும்... இந்தச்
சிரமங்கள் எங்களுக்காகதானே ...சைக்கிளில் சென்று பிரியமுடன் வாங்கி
வைத்திருக்கிறார்கள்.மாலை நேரம் வந்தது.. ஒரு பொட்டு வண்டியில்
கட்டியிருந்த ஒலிப் பெருக்கியில்...’ ‘இவர்தானா...அவர் கானா.... ‘ பாட்டுச்
சத்தம் கேட்டது. திலகம்... திரைப்பட நோட்டீசு விநியோகம்.என்றாவது ஒரு நாள்
பரமத்தி டூரிங் டாக்கிசுக்கு புதுப் படத்திற்கான அழைப்பு. முன்னிருட்டும்
நேரம் வந்தது. மின் விளக்கு இல்லா ஊரில் சீமைத் தண்ணியில் விளக்கெரிய
வேண்டும். அந்தத் தண்ணி விற்பனை, எங்கள் தாத்தாவிடம்... ஒரு பாட்டில்
எண்ணெய் நாலணா ... அந்த நாலணாக்களை அடுக்கி அழகு பார்ப்பதில்...எங்களுக்கு
ஆர்வம் அதிகம். விற்பனை முடிந்தது... தாத்தாவைக் கவனித்தேன். பனை ஓலைச்
சுவடி ஒன்று எடுத்து , எழுத்தாணியால் ..அன்றைய வரவு செலவு கணக்குகளை
எழுதினார்...நானும் எழுதறேன் என்று அடம் பிடித்து
வாங்கினேன்...முடியவில்லை.. எதுவும் ஒலையின் பதப் படுத்தலிலும், ஆணி
பிடிக்கும் கைப்பழக்கதிலே யும் உள்ளது எனப் புரிந்தேன். பிறகு அவர்
அடுப்புக் கரி ஒன்ற எடுத்து ஈரத்தில் உரசி அந்தப் பசையை எழுத்துகளின் மீது
தடவ எழுத்துகளை நன்கு படிக்க முடிந்தது, அடுத்து சற்று நேரத்திற்கு வெளியே
நீளக்கப் போட்டிருந்த கல் திட்டில் அமர்ந்தோம். அக்கம்பக்கத் தோர்
அருகமர்ந்து உரையாடியது நினைவில் பசுமையாக. பின்னர் அம்மாயியின் குரல்
கேட்க ... அவர்கள் கையில் பாலன்னம் உண்டு...திறந்த வெளியில் வானத்தில்
துல்லியமாய்த் தெரிந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே ..அவ்விடத்தே
உறங்கிட... ஒவ்வொருத்தராய்  கொட்டத்தில் படுக்க வைப்பது தாத்தாவின்
வேலை.   மறுநாள் காலை பொழுது புலர்ந்தது. மல்லிப்பூ மிருதுவாய் இட்லி சுடச்
சுட நல்ல கெட்டித் தேங்காய் சட்னியோடு...இதுதான் எங்களுக்கு அப்போதைய
சிறப்பு பலகாரம்...சின்னம்மாயி ஊட்டிவிட...

தாத்தாவுடனும்...அம்மாயியுடனும் இரண்டு பர்லாங் தொலைவில் உள்ள எங்கள்
தோட்டத்திற்கு நடந்தோம்... நடுவில் கிணற்றில் இறங்கினோம். தங்கையின்
இடுப்பில் புடவை ஒன்றின் நுனியை இறுகக் கட்டி ..மற்றொரு முனையைத் தாத்தா
சற்று உயர நின்று பிடிக்க...ஆழமற்ற படிக்கட்டு பக்கத்திலே அவளுக்கு நீச்சல்
பாடம்...கைகளுக்கும்..காலுக்கும்.. எனக்கோ முதுகில் சுரக்குடுக்கை
கட்டப்பட்டு.. உள்பக்கம் தள்ளிவிட்டனர்... மிதந்தோ, நீச்சலடித்தோ நான் கரை
சேர வேண்டும்... அண்ணனோ பயமுறுத்துதல் போன்று...மேலே ஏத்துமரத்தில் ஏறி
நின்றுகொண்டு .. அப்பொழுது வெளியான ஆங்கிலப் பட ஹீரோ... ‘ நான்தான் கேப்டன்
மார்வல் ’ என்று கூவி கிணற்றில் குதிக்க.... ‘ ...அந்த சூழல் எல்லாமே
அன்றைக்கு ஒரு நிஜ வசந்தம்....இன்றைக்கு ஒரு கனாக் காலம்...’




கோதை தனபாலன்.

No comments:

Post a Comment