Wednesday, November 30, 2011

சீரடி சாய் பாபா

பொதுவாக எனக்கு துறவிகள் செயல்பாடுகள் மீது அவ்வளவாக ஈடுபாடு இராது.சித்தர்கள் மீது ஒரு தனி அபிமானம் உண்டு. அந்த வரிசையில் ரமணர்,வள்ளலார் இந்த இருவர் மீதிலும் பக்தி கலந்த மரியாதை இருக்கும். இப்படி நான் பேசுவதால் இறைவன் என்ற ஒரு மாபெரும் சக்தியை நம்பாதவள் என்ற அர்த்தம் கிடையாது.தெய்வங்களை வணங்க பிரியப்படுபவள்.சன்னதியில் நின்றால் என்ன வேண்டலாம் என்று குழம்புவேன் .மொத்தத்தில் 'எல்லோரையும் நன்றாக வை.உன்னை அன்றி எதுவும் நிகழாது .எங்களுக்கு எது நல்லது என்று   நீயே மனம் கோணாது தெரிவு செய்...'....மனசுக்குள் சொல்லிவிட்டு வந்து விடுவேன்.  எப்படி பட்ட கஷ்டத்திலும் இதே வேண்டுதல் தான் அவன் முன் வைப்பேன்.
இப்படி இருக்கையில் சத்யா சாய்பாபா பற்றி கேள்விப்படும்போது அவர் புட்டபர்த்தியில்  ஏற்படுத்திய இலவச மருத்துவம் மனதை கவர்ந்தது.புத்தகங்களும் படித்து பார்த்தேன். பின் மெதுவாக சிலர் சீரடி சாய்பாபாவை பற்றி பேசுவது அடிக்கடி என் கவனத்தை ஈர்த்தது. மதுரையிலும் அவருக்கு கோயில் எழுப்பி உள்ளதை அறிய நேர்ந்தது.போனவாரமும் சென்றுவந்தேன் . அதற்கு  பின்னரே இதை எழுதுகிறேன்.
அவரை தரிசித்து ,அங்குள்ள வாசகங்களை படித்தேன்.முருக தெய்வம் சொல்வது போல் 'யாமிருக்க பயமேன்' என்றிருந்தது, பின்னர் இருபக்கத்திலும்
'நம்பிக்கை'....' பொறுமை' வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. உண்மைதானே..நம்பிக்கை மட்டும் நாம் வைத்தல் போதுமானதல்ல....
 கைகூடும் காலம் வரை பொறுமை கைப்பிடித்தல் அவசியம் அன்றோ? பொறுத்தார் பூமியாள்வாரன்றோ?
பிறகு சுற்று பிரகாரம் வருகையில் ஒரு அடுக்கில் தீமூட்டி எரிந்து கொண்டிருந்தது. அதன் விளக்கம் ‘இங்கே உன் பாவங்கள் பொசுக்கப்படுகின்றன, அந்த சாம்பலே உனக்கு பிரசாதமாய் திரு நீறாய் அளிக்கப்படுகிறது’...இந்த உண்மை புரிந்து கொள்ளக்கூடியதே. சைவசித் தாந்தம் இதைத்தானே சொல்கிறது. மேலும் தொடர்ந்து படித்த ஒரு வாசகம் என்னை சற்று நேரம் சிந்திக்க வைத்துவிட்டது.
‘  நீ எப்பொழுது அழைத்தாலும் உன்னை இறைவனிடம் சேர்க்க வழித்துணையாய் நான் வருவேன்,மறைந்தேன் என எண்ண வேண்டாம்’
இதுகா றும் இப்படி எந்த ஞானியும் சொன்னதாக நான் அறிந்ததில்லை. ஏதோ ஒன்று என் மனதில் ஆழமாய் புரியதலைப்பட்டது. மனிதனோடுமனிதனாகவே
  நம்மை இறைவனிடம் அழைத்து செல்லக்கூடிய உயரிய சக்தி அவருள் எந்தக்காலமும் உதயமான வண்ணமே இருக்கும் என்பதுதான் அது. மனம் நெகிழ்வுற்றது. வள்ளலார்,'அன்பேசிவம்’ என்று கூறி,தீ என்றும் அணையாது மூட்டப்பட்டு அனைவரது பசி தீர்க்கும்  வழிவகை செய்தார்.
 இவர் இறைவனை மறவாதிருக்கும் வழி காண்பிக்கிறார்..   நன்றி பெருக்குடன் இதை எழுதிவிட்டேன்....



 கோதைதனபாலன்






No comments:

Post a Comment