Sunday, September 16, 2018

THERE IS NO SUFFERING ,THERE IS NO DEATH. SATSANG & ROBERT

THERE IS NO SUFFERING ,THERE IS NO DEATH.
SATSANG & ROBERT
நன்றி ..RAMAKRISHNAN CR.
உண்மையில் ஒரு தேடலில் இருக்கும் மனம் , உண்மையை நாடி விழைந்தே இருக்க இது போன்ற பதிவுகள் .. படிக்க படிக்க ஒரு விசாலமான தெளிவை நோக்கி நம்மை நகர வைக்கிறது.
இது ஸ்ரீ . ரமணர் சீடர் ராபர்ட் அவர்களால் சொல்லப்பட்டது. இதை தன் இதயம் செய்யும் ஒரு ரீங்காரச் சிந்தனையாய்.. தனக்குள்ளேயே தானே குருவாகவும் சீடராயும் நின்று கேள்வி பதிலைத் தருகிறார்.
யாராவது இறைவனிடம் தனது துன்பங்களைப் போக்க வழி வேண்டி பிரார்த்தித்தால் என்ன நடக்கும் ? வினவுகிறார் .
துன்பத்தைப் போக்கத் தெரிந்தவனுக்குத் திரும்பவும் அதைத் தரத் தெரியும் என்பதை மனம் உணர வேண்டாமா ?
எதனால் இப்படி தோன்றுகிறது ?
நாம் நமக்குள் இருக்கும் நான் எனும் நினைவை, அது எப்படியுள்ளது என்பதை உணராமலே நாம் நம்புகிறோம்.
அது நமக்கு பெருமை யுணர்வை, உடலை , புத்தியை, உலகத்தை , இந்த பிரபஞ்சத்தை , இன்னும் கடவுளை அறிமுகப்படுத்தி விடுகிறது.
அதன் வழி நம் சிந்தை செல்ல துன்பங்களை அறிகிறோம்..உணர்கிறோம். இறப்பைப்பற்றி பேசுகிறோம். இதுவே எதுவும் முழுமையாகப் புரியாமலே நம்மை நடத்துகிறது..
துன்பம், இறப்பு என்று எதுவுமில்லை.
"நான்" .. அது இதயம் உணர்ந்தெடுக்கும் நிலைக்களனில் உள்ளதை அறிவோம்.
அதை , அதன் செயல்பாடுகளின் தன்மையை நம் அறிவு ஒருபோதும் கிரகிப்பது இல்லை.
அதனால் நேர்ந்துவிட்ட சம்பவத்திற்கு உடனே நாம் எதிர்வினையாற்றுகிறோம்.
அப்படி செய்யும்போது நாம் இந்த உடலை வைத்துக் கொண்டு நாம்தான் செய்கிறோம் , செய்யணும் என்ற நினைவிற்கு போனால் அது அறியாமையிலேயே நம்மை வைத்து விடுகிறது.
"நான் " அது இருக்கும் இடத்தில வைத்து நினைக்க நம் செயல்கள் எதுவும் இந்த உடலாலோ , புத்தியாலோ , உலகத்தாலோ அல்ல. பிரபஞ்சம் காட்டும் சக்தியினாலும் ஆட்படுவதல்ல.
அதற்கு மேற்கொண்ட ஒருவன் ..
அவனே "நான்" எனும் ஆன்ம உணர்வு .. அதன் வழி காரியங்கள் நடக்கின்றன.
இதைப் புரிந்து செல்லும் பக்குவத்திற்கு நாம் வர வேண்டும்.
துன்பம் எதனால் வருகிறது என்ற கேள்விக்கு ஒரு பதில் " நான் " எனும் சிந்தை கொள்வதால்.
அதை நாம் கண்ணால் காண முடியாது.
ஆக துன்பம் இல்லை என்றாகிறது.
அடுத்து , நாம் நடைமுறையில் இந்த உலகம் நமக்கு ஏற்ப இல்லாததால் கஷ்டம் வருகிறது என்கிறோம்.
இது ஒரு தன் முனைப்பு ( CONSCIOUSNESS ) சார்ந்த சிந்தனை.
உலகில் தன் முனைப்பு என்பது ஒன்றுதான். இதோடு மற்றெதுவும் சம்பந்தமாகி வராது.
தன முனைப்பில் ஒருவன் இருக்க அங்கு துன்பபடுகிறவன் என்று ஒருவனும் இல்லையே.
காட்டு விலங்குகள் தங்கள் கஷ்டங்கள் உணர்வதில்லை, இறப்பை எண்ணி வருத்தமாவதில்லை. அந்த வாழ்வை தங்களுக்கு ஒரு அனுபவமாக பார்த்து பிறந்து வளர்ந்து மடிகின்றன.
அதுபோல்தான் நாமும். ஆன்ம இயக்கங்களில் வாழ்கிறோமேயன்றி நாம் கொண்ட உடலாலும் , மதியாலும், நான் என்ற பெருமையாலும் , உலகம் நமக்களிக்கும் என்ற நம்பிக்கையாலும் இல்லை.
நமக்குள் இருக்கும் நான் எனும் ஆன்ம சிந்தையை சரியாகத் தெளிந்தால் ..அதுவே அங்கிருந்து கிளம்பி வெளியே வந்து அந்த இடத்திற்கே போயமரும் தன்மையை உணரலாம்.
இதை உணர வைக்காமல் காணாத கடவுளை இருப்பதாகச் சொல்லி ,வேறு எங்கிருந்தோ நமக்கு இடர் படைக்கப் பட்டு வருவதாயும், பின்னர் கடவுளை வேண்டினால் அது அகன்று விடுவதாயும் முன்னவர் வெகு காலமாய் நம்மை மூளைச் சலவை செய்து
வந்துள்ளனர்.
இந்த அளவில் படித்து வர , எனது நினைவு , " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்ற தமிழ்க் கூற்றை நினைத்தது.
சுருக்கமான உண்மையில் வைக்க வேண்டுமானால் நம்மை .. அதாவது நம்முள் இருக்கும் நான் (CONSCIOUSNESS )எனும் சிந்தையை சரியாக உணர்ந்து செயல்பட்டாலே துன்பமும், மரணமும் நம் சிந்தையை விழுங்காது.
கடவுளும், வழி நடத்தும் குருவும் , தன் முனைப்பு சிந்தனையும்( CONSCIOUSNESS ) ஒன்றே என அறிக. .
இவை நம் கண்களுக்குப் புலனாவதில்லை.
நடைமுறை வாழ்வில் ஆண்டனுபவித்த பெரியவர்கள் சிலர் தங்களது இறுதிப் படுக்கையில் வரும் மரணத்தை , மன நிறைவோடு எதிர்கொள்ளும் விதம் மனக்கண்ணில் நிழலாடிற்று.
( என்னால் முடிந்தவரை தமிழாக்கத்தில் )
கோதைதனபாலன் 

Tuesday, January 21, 2014

chithirame chithirame...



சித்திரம்போல் சித்திரம்போல் சிரித்திருப்போமே !


சிலையைப் போல உலகை நாமும் மறந்திருப்போமே !

Friday, January 10, 2014

 
செய்வது அறியாச் சிறு நாயேன்
செம்பொன் பாதம் மலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும்
பெறுதற்கு உரியேன் பொய் இலா
மெய்யர் வெறியார் மலர்ப் பாதம்
மேவக் கண்டும் கேட்டிருந்தும் 

பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு 
இருப்பது ஆனேன் போர் ஏறே 

.... திருவாசகம் 

பொறி வாயில்களான ஐந்து வழிய யானைகளையும் அழிக்கின்ற போரில் அரி ஏறுபோன்றவனே! பொய்யாகிய உலக வாழ்வில் பற்றற்ற மெய்யன்பர்கள் நறுமணம் கமழும் தாமரை மலரொத்த திருவடிகளை அடைதலை நேரில் கண்டிருந்தும், நீ அறிவுறுத்தியருளக் கேட்டிருந்தும், அந்நெறியிற் செல்லமாட்டாது பொய்யாகிய உடலோடு வாழும் உலக வாழ்க்கையை உடையேனாகிய யான் இவ்வுடலைப் பேணும் பொருட்டு உண்டும் உடுத்தும் இருப்பவனாயினேன். இதனை நீக்குதற்கு செய்யத்தக்கது இன்னதென்று அறிந்து கொள்ள இயலாது சிறுமையான நாய் போன்ற நான் , உனது சிவந்த பொன் போன்ற திருவடி மலர்களைக் காணும் பேறு இல்லாத பொய்யான உலக வாழ்க்கை வாழ்கின்றவர்கள் பெறத்தக்க துன்பப் பேறுகள் அத்தனையும் பெறுவதற்குரியவன் ஆகிறேன்.


கோதை தனபாலன்  
கம்பராமாயணம்..    ( ஒரு ஒப்பீடு .. படித்தது.)

'' It was hard for Hitchkock's colleagues to understand how a man doing such a stressful work could stay so calm and detached.'

....Robert Green ..p.31.

 ஹிட்ச் காக்கின் வெற்றியின் ரகசியமே அவர் மனநிலையை எந்த ஒரு அழுத்தத்திற்கும் இடம் கொடாது சமநிலையில் வைத்து காரியம் சாதித்ததுதான் அவரை வெற்றி வீரராக்கியது.
இங்கு இதே கருது கம்பராமாயணத்தில் ராமனைப் பற்றி வர்ணிக்கும் இடத்தில எடுதியம்பப்படுகிறது.  முதல் நாள் அரசுரிமை சொல்லி தசரதர் கொசலனாட்டின் மணிமகுடத்தை அவனுக்குச் சூட்ட விழைந்தபோதும் சரி, மறுநாள் கைகேயி பெற்ற  வரத்தின் பயனால் பரதனுக்கு  மகுடம்  மாறும் நிலையிலும் சரி...ராமனின் பேராசை, சந்தோசம்,வருத்தம் எதுவும் காணாத சமநிலை   தோற்றத்திலேயே இருந்தது...  உணர்த்தும்பாடல்..

''தாதை  அப்பரிசு உரை செய , தாமரைக் கண்ணன் 
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன் ;கடன் இது என்று உணர்ந்தும் 
யாது கொற்றவன் ஏவியது, அது செயல் அன்றே 
நீதி எற்கு என நினைந்து , அப்பணி தலை நின்றான்.'
....மந்திரப்படலம் ..69.       
   
 ' என் இனி உறுதி அப்பால் . இப்பணி தலைமேற் கொண்டேன் 
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் ..'
.......கைகேசி சூழ்வினைப்படலம். 114   

இந்த இரண்டு சூழ் நிலையையும் ராமனை நெருங்கி கிட்டத்தில் இருந்து பார்த்தவள் சீதை.அரசு என்றபோதும் , காடு என்றபோதும் இராமன் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாது கல்போல் இருந்தது..அதே சமநிலைத் தோற்றம் 13 ஆண்டுகள் கழித்தும் மறக்கமுடியவில்லை... அதனால் தான்  பாதகர் சிறையில் தான் வாடியபோதும்...அவளின் மலரும் நினைவுகளில்  
அந்தக் காட்சி நிழலாடுகிறது.  சொல்லும் பாடல்...

'மெய்த் திரு பதம் மேவு என்ற போதிலும் 
இத் திரு துறந்து ஏகு என்ற போதிலும் 
சித்தரத்தின் அலர்ந்த செந்தாமரை 
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள் .'
....காட்சிப் படலம் 20


 கோதைதனபாலன்.

Friday, January 3, 2014




கண்ணனைக் கண நேரமும் பிரியா கண்கள் ! 
கண்கள் மூடினால் உன்னைக் கண்டேன்...இரு கண்கள் திறந்தால் உன்னைக் காண்பேன்... இவள் 
கண்ணதாசனின் ராதையோ ! கோதையோ !!

கோதை தனபாலன் 








ஆன்மீகத்தில் எனக்கு மனதில் பதிந்த ஒன்று .. நம்மாழ்வார் கூற்று.


செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் ,எத்தைதின்று எங்கே கிடக்கும்..? இது மதுரகவி ஆழ்வார் கேட்டகேள்வி. இதற்கு பதில் சொல்லுமுகமாகவே பாலகப் பருவத்தில் நம்மாழ்வார் முதல் முறையாக இப்படி திருவாய் மலர்ந்தருளினார்.. " அத்தைத் தின்று அங்கே கிடக்கும். நமக்கு மேலார்ந்த பொருளில் ஒன்றும் விளங்காது. ஆனால் சுற்றியிருந்த பக்த சிகாமணிகளுகேல்லாம் அந்த தத்துவம் விளங்கிற்றே.

கேள்வியின் பொருள்... இந்தஉடல் இப்பிறவியில் நீங்கி புது பிறவியாக புது உடல் பெற்றால் எதைக் கொண்டு ,எதன் அடிப்படையில் தன் உயிரை வளர்க்கும்.?
பதிலின் விளக்கம்...
அது எந்த ரூபமாகப் பிறவி எடுத்துள்ளதோ அந்த உயிரினம் அல்லது உயிர்ப்பொருள் ஒழுங்குகளிலிருந்து தன வாழ்க்கையைத் தொடங்கும்.

இதைப் புரிந்து கொண்ட பொழுது ... ஔவை சொன்னதே நினைவில் ஓடியது.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது..மானிடராயினும் ..கூன் ,குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது.

தமிழ் ஆன்மீக பக்தி இலக்கியங்கள் பல நம்மிடை இருக்கையில் படித்து பயன் பெறாமல் காலத்தைக் கழிப்பது வீணே .



கோதை தனபாலன்.









































 



சின்ன நெடுங்கூர்

ஐந்தாம் வகுப்பின் அரையாண்டுத்தேர்வு முடிந்தது. இனி விடுமுறை நாட்களை
எவ்வண்ணம் கழிப்பது என்ற சிந்தை யுடனே ...கையில் அம்மா கொடுத்த
முறுக்கொன்றை வைத்து, சுவைத்து .. இலங்கை வானொலியில் தமிழ்த் திரைப்
பாடல்களை ஆனந்தமாய் ரசித்து் கொண்டிருந்தேன். வெளிக்கதவில் தாழ்ப்பாள்
தட்டப் படும் ஓசை கேட்டு திரும்பிப் பார்க்கிறேன்...முகத்தில் ஒரே பரவசமாய்
ஓடோடிச் சென்று கதவைத் திறந்தேன்... அங்கே என் தாத்தா ...தலையில் முண்டாசு
கட்டிக் கொண்டு, முக்கால் கைச் சட்டை ஒன்று தொளதொளவென்று அணிந்து,
கணுக்கால் ஏறிய நான்கு முழ வேட்டி ஒன்று கட்டிக் கொண்டு... நின்று
கொண்டிருந்தார்.. அதே வேகத்தில் திரும்பி...’அம்மா ! தாத்தா
வந்திருக்கிறார் ...’ என்று அடுப்படிக்கு ஓடோடிசென்றேன். அம்மாவுடன்
திரும்ப வருவதற்குள் அவர் பட்டசாலையில் ஒரு பெஞ்சில் அமர்ந்து தன்னை
ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார். ‘வான்னா.. ‘ அம்மா கொங்குத் தமிழில்
விளிக்க.. ஆமாம்...அப்பாவை அன்று அப்படித்தான் அழைப்பார்கள். பிசிறான
ஒருவித கரகரத்த குரலில் அவர்... ‘விட்டலாபாயி ..! புள்ளைங்களுக்கு பரீட்சை
முடிஞ்சிருக்கும்.... கிணற்றில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும்போது
அவர்களுக்கு நீச்சல் கற்றுத் தரனும்....கூட்டிட்டு வாங்கன்னு
...தங்கம்மா...( எங்கள் அம்மாயி பெயர் )சொல்லி அனுப்பிசிருக்கா’...
அதுக்கேண்ணனே...இன்னிக்கு பரீட்ச முடிஞ்சுது நாளைக்கு கூட்டிட்டுப்
போங்க..’ என்று சொல்லி ஒரு சொம்பு நிறைய மோர் ..அவருக்கு பருக அம்மா கொண்டு
வந்து கொடுத்தாங்க.

மறுநாள் சாக்குத்துணியில் தைத்திருந்த அந்தக் காலப் பைக்கட்டில் எனது, என்
தங்கை, என் அண்ணன் மூவரின் துணிகள் திணிக்கப் பட்டு நானும் தங்கையும்
தாத்தாவின் கைகளைப் பற்றிக் கொண்டு பஸ்ஸ்டாண்டு சென்றோம்...எங்கள் ஊர் ஒரு
குக் கிராமம் , சின்ன நெடுங்கூர் காணும் ஆவலில். கரூரிலிருந்து கோவை
செல்லும் மார்க்கத்தில் 12 வது கல் அதாவது மைல் தொலைவில் அந்த ஊர் உள்ளது.
மணி நேரம் காத்துக் கிடந்து ஒரு வழியாய் பஸ்பிடித்து பயணித்து.. காருடையாம்
பாளையம் ஒத்தக் கடையில் இறங்கினோம். இனி எதிர்புறம் தெரியும் விலக்கில் (
பாதை பிரிவு ) இறங்கி நடக்க வேண்டும் பஸ்  நகரவும் சிறு பிள்ளைகளும், பருவ
மங்கையரும் ஓடி வந்து அது நின்றிருந்த இடத்தில முகம் குனிந்து ....அந்த
பெட்ரோல் வாசத்தை முகர்ந்து சந்தோஷப்பட்டனர். அன்று அவை எல்லாம் புதியதின்
தாக்கங்கள். அந்த வயசிலும் நாங்கள் இந்த அப்பாவித்தனத்தை எண்ணி ரசித்தபடியே
பிரிவுப் பாதையில் இறங்கி நடக்கலானோம். பாதை இருமருங்கிலும் உயரம் குறைவான
கருவேல மரங்கள். எண்ணி எடுத்தாற்போல் கண்களில் தெரியும் வளர்ந்த பனை
மரங்கள் ! சிவப்பு நிறம் மேவிய மண்ணில் சரி போட்டியாகக் கூழாங்கற்கள்
பரவலாகக் கிடந்தன. வானம் , மேகம் காணாத உயரத்தில் , ஒரு வெட்ட வெளியில்
நீருக்கு ஏங்கும் மணற்பரப்பில் எங்கள் நடைப் பயணம் தொடர்ந்தது. வானம்
பார்த்த பூமியில் மழை குறைவு.  ஆங்காங்கே ஆட்டுப் பட்டிகளைக் கடந்து, ,
பத்துப் பதினைந்து வீடுகளே உள்ள ஒரு சிற்றூரைக் கடந்து...பாதை வளைந்து
வளைந்து நீண்டது. ஏதோ சில பறவைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பறந்த
நிலையில்....அதோ ! சிறிய பிள்ளையார் கோயில் கோபுரக் கலசம் கண்ணில்
தெரிகிறது. எதிர்புறத்தில் ஊருக்குப் பொதுவான பெரிய உரலில் மூன்று
உலக்கைகள் மாறி போட்டு சில பெண்கள் சோளம் குத்துகின்றனர். ஒரு மச்சு
வீடு..., ஓரிரு ஓட்டு வீடுகள்.. மற்றவை பனை ஓலை வேய்ந்த குடிசைகள்... ஆனால்
அவை சாணம் தெளித்து வைக்கப் பட்ட பெரிய உள்முற்றங்கள் கொண்டவை. சுற்றுப்
புறச் சுவர் மணற்கலவையால் எடுக்கப் பட்டவை... இதோ காட்டாறு ஓடிய
தடத்தைக் கடந்தாயிற்று.. இடது பக்கம் ஆள் அரவமே காணாத தூரத்திற்கு
ஆவாரங்காடு....வலது புறம் பெரிய அரசமரம்,சற்று தள்ளி பவுதியாயி அம்மன்
கோயில், அதையொட்டி காட்டாறு பாய்ந்த தடத்தில் வளைவுகளுடன் சிறு சிறு
மணற்திட்டுகள். வீடும்  நெருங்கிற்று. பொதுக் கிணற்றில் குடிக்க நீர் எடுக்கும் சில பெண்மணிகள்  ...விசாரணைக் கணைகள் எங்களிடம்... ‘ஆயா,
ஆயா...மீனாக்ஷி கோனாரு பேரன் பேத்தி எல்லாம் வர்ராங்க..!’ சின்ன அம்மணி என்ன
படிக்குது ? உங்க ஆயா என் இங்கே வரமாட்டேங்குது..?’ நீதான்  கோயமுத்தூர்ல படிச்ச
பொண்ணா...’ இனி நீ அடுத்து பெரிய மனுஷியாயிடுவ போல இருக்கே
!’......இத்யாதி...இத்யாதி...எல்லாத்துக்கும் புரிஞ்சும் புரியாமலும் பதில்
சொல்லிட்டு ..வீட்டினுள் நுழைந்தாயிற்று. உள் வாசல் அம்மாயி சாணம் போட்டு
நேர்த்தியாக தெளித்து பளிச்சென்று வைத்திருந்தது. இடது பக்கம் சீமை ஓடு
வேய்ந்திருந்த வீடு.. செங்கற்சுவரால் ஆனது... கம்பிக்கதவு போட்டது.
எதிர்புறம் தகரத்தால் வேய்ந்திருந்த அடுக்களை..வலது புறம் பனைஓலை வேய்ந்து
சுண்ணாம்புக் கலவையால் மெத்தியிருந்த கொட்டம். எங்களுக்கு அதுதான்
பட்டாசாலை.ஒரு கயிற்றுக் கட்டில்...அதுதான் சோபா..அடுப்படியில் ஒரு பெஞ்ச்
அதுதான் சாப்பாட்டு மேசை. கொட்டத்துப் பரணில் பெரிய அளவிலான தாழம்பூக்
குடை... மடக்க முடியாதது...வட்ட வடிவம் உள்ளது... ஆனால் அழுத்தமாய்...என்றோ
ஒருநாள் பெய்யும் மழைக்காக. அடுத்து ஒரு பெரிய ..பக்குவப் படுத்தப் பட்ட
சுரக் குடுக்கை. நாங்கள் நீச்சல் கற்றுக் கொள்ளப் பயன்படுவது.

அம்மாயி எங்களைப் பார்க்கவும் கதைகள் பல கேட்டு ..சின்ன அம்மாயி .நன்கு
மனமுள்ள பருப்பும், நெய்யும் போட்டுப் பிசைந்த பூப் போன்ற மலர்ந்த
சாதத்தைப் பிசைந்து , வதக்கிய கத்திரிக்காய்க் கூட்டுடன் எங்களுக்கு
ஊட்டினார். இனி எங்களது தேடுதல் வேட்டை ஆரம்பம். பின்புற வாசலுக்கு பசு மாடு
பார்க்கச் சென்ற அண்ணன் கேட்டது..தாத்தா !! ‘ இது என்ன ரண்டு
வெள்ளாடுகள்.. ‘ ஒன்றுமில்லை ஜானகிராமா! ஆட்டுப்பால் நல்லது எனக்கு
...என்று வாங்கிக் கட்டினேன்... சொல்லி சிறிது பால் கரந்தும் குடிக்கக்
கொடுத்தார்.. நாங்கள் சைவம் மட்டும் எடுப்பவர்கள். பிறகு சிறுமியர் எங்கள்
பார்வையில் ... கோபால் பல்பொடி பாக்கெட், ரெமி பவுடர்,சாந்து  பொட்டு, கண்மை
.... கையில் எடுத்துக் கொண்டு தாத்தா இதல்லாம் இங்கு கிடைக்குதா... தங்கை
கேட்கிறாள்.. அதோடு...’ சினிமா நட்சத்திரங்களின் அழகு தாரகை சோப்பு ...
லக்ஸ்... எங்கள் முகத்தில் புன்முறுவல்.. ‘ செகு...( ஜெகதாம்பாள் பேரின்
செல்லச் சுருக்கம் )நீங்கல்லாம் வர்றீங்கன்னு முந்தா நாள் பரமத்தி
சந்தையில் போ’’ய் வாங்கி வந்தேன்.’ இதைக் கேட்கவும் என் உள்ளம்
இளகியது..அந்த ஊருக்கு இன்னும் ஐந்து மைல் செல்ல வேண்டும்... இந்தச்
சிரமங்கள் எங்களுக்காகதானே ...சைக்கிளில் சென்று பிரியமுடன் வாங்கி
வைத்திருக்கிறார்கள்.மாலை நேரம் வந்தது.. ஒரு பொட்டு வண்டியில்
கட்டியிருந்த ஒலிப் பெருக்கியில்...’ ‘இவர்தானா...அவர் கானா.... ‘ பாட்டுச்
சத்தம் கேட்டது. திலகம்... திரைப்பட நோட்டீசு விநியோகம்.என்றாவது ஒரு நாள்
பரமத்தி டூரிங் டாக்கிசுக்கு புதுப் படத்திற்கான அழைப்பு. முன்னிருட்டும்
நேரம் வந்தது. மின் விளக்கு இல்லா ஊரில் சீமைத் தண்ணியில் விளக்கெரிய
வேண்டும். அந்தத் தண்ணி விற்பனை, எங்கள் தாத்தாவிடம்... ஒரு பாட்டில்
எண்ணெய் நாலணா ... அந்த நாலணாக்களை அடுக்கி அழகு பார்ப்பதில்...எங்களுக்கு
ஆர்வம் அதிகம். விற்பனை முடிந்தது... தாத்தாவைக் கவனித்தேன். பனை ஓலைச்
சுவடி ஒன்று எடுத்து , எழுத்தாணியால் ..அன்றைய வரவு செலவு கணக்குகளை
எழுதினார்...நானும் எழுதறேன் என்று அடம் பிடித்து
வாங்கினேன்...முடியவில்லை.. எதுவும் ஒலையின் பதப் படுத்தலிலும், ஆணி
பிடிக்கும் கைப்பழக்கதிலே யும் உள்ளது எனப் புரிந்தேன். பிறகு அவர்
அடுப்புக் கரி ஒன்ற எடுத்து ஈரத்தில் உரசி அந்தப் பசையை எழுத்துகளின் மீது
தடவ எழுத்துகளை நன்கு படிக்க முடிந்தது, அடுத்து சற்று நேரத்திற்கு வெளியே
நீளக்கப் போட்டிருந்த கல் திட்டில் அமர்ந்தோம். அக்கம்பக்கத் தோர்
அருகமர்ந்து உரையாடியது நினைவில் பசுமையாக. பின்னர் அம்மாயியின் குரல்
கேட்க ... அவர்கள் கையில் பாலன்னம் உண்டு...திறந்த வெளியில் வானத்தில்
துல்லியமாய்த் தெரிந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே ..அவ்விடத்தே
உறங்கிட... ஒவ்வொருத்தராய்  கொட்டத்தில் படுக்க வைப்பது தாத்தாவின்
வேலை.   மறுநாள் காலை பொழுது புலர்ந்தது. மல்லிப்பூ மிருதுவாய் இட்லி சுடச்
சுட நல்ல கெட்டித் தேங்காய் சட்னியோடு...இதுதான் எங்களுக்கு அப்போதைய
சிறப்பு பலகாரம்...சின்னம்மாயி ஊட்டிவிட...

தாத்தாவுடனும்...அம்மாயியுடனும் இரண்டு பர்லாங் தொலைவில் உள்ள எங்கள்
தோட்டத்திற்கு நடந்தோம்... நடுவில் கிணற்றில் இறங்கினோம். தங்கையின்
இடுப்பில் புடவை ஒன்றின் நுனியை இறுகக் கட்டி ..மற்றொரு முனையைத் தாத்தா
சற்று உயர நின்று பிடிக்க...ஆழமற்ற படிக்கட்டு பக்கத்திலே அவளுக்கு நீச்சல்
பாடம்...கைகளுக்கும்..காலுக்கும்.. எனக்கோ முதுகில் சுரக்குடுக்கை
கட்டப்பட்டு.. உள்பக்கம் தள்ளிவிட்டனர்... மிதந்தோ, நீச்சலடித்தோ நான் கரை
சேர வேண்டும்... அண்ணனோ பயமுறுத்துதல் போன்று...மேலே ஏத்துமரத்தில் ஏறி
நின்றுகொண்டு .. அப்பொழுது வெளியான ஆங்கிலப் பட ஹீரோ... ‘ நான்தான் கேப்டன்
மார்வல் ’ என்று கூவி கிணற்றில் குதிக்க.... ‘ ...அந்த சூழல் எல்லாமே
அன்றைக்கு ஒரு நிஜ வசந்தம்....இன்றைக்கு ஒரு கனாக் காலம்...’




கோதை தனபாலன்.