Friday, January 3, 2014

பெரிசுகளின் அட்டகாசம்...

‘அக்கா, பால் கறக்க கார்மேகம் வந்தாச்சு..!
‘இந்தா வர்றேன்...ஒரு சொம்பு எடுத்துக் கொண்டு கொடுக்க , கறந்த பாலையும் வாங்கி... சில்லறைக்கு ஊத்தற கணக்கை வெளியேற்றி விட்டு..
‘மருதா, கன்றை நல்லா மோதவிட்டு, சற்று துள்ளவ
ிட்டு கட்டு... மாட்டுக்கு இரைய அள்ளி வச்சுட்டு வா.. புண்ணாக்கு ஊறப்போடனும், மார்கெட்டுக்கு வேற போகணும்..
எனக்கு அடுப்புல வேலை .. சீக்கிரம் சட்னியை அரைச்சு கொடுத்துட்டு , அப்புறம் அவங்களுக்கு அந்த மஞ்சள் தனியாக கொஞ்சம், மிளகாய் மல்லி சீரகம் தனியா அரைச்சுக் கொடு... ஆமாம் அப்போதெல்லாம் மிக்சி இல்லை... கட்டளைகளை பிறப்பித்துவிட்டு காலை டிபன் இட்லி ஊத்தலானேன். இப்படி ஒன்பது , பத்துமணிக்குனு டிபன் சாப்பிட்டா மதியத்துக்கு எனக்கு சைவம் தனியா , அவங்களுக்கு அசைவம் தனியான்னு வேலை எப்ப முடியறது... என்று மனம் சலிக்க, பாட்டி... பாட்டி... ஊரிலிருந்து ஒரு உறவுகாரர் வந்திருந்தார்.. ‘ நீங்க வாத்தியாரம்மாவோட பார்க்கற வேலையைப் பாருங்க.. எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. அந்த பாட்டிக்கு விபரம் தெரியும்.. என்று என் உள்ளிருப்பு வேலைகளைக் கவனிக்கலானேன்.
‘அக்கா ! மருதன் கூப்பிட்டான்...
‘அரைச்சுட்டேன்.. எல்லாம் எங்க வைக்கறது..மஞ்சளை மட்டும் அங்கேயே அந்த பிளாஸ்டிக் தட்டில் வச்சுட்டு மத்தத்தை எடுத்துட்டு வா...’ அப்புறம் அந்தக் கோழி, குஞ்செல்லாம் திறந்து வெளில விடு.. கொஞ்சம் வெங்காயத்தையும், சோறு இந்தா அதுக்கு போட்டுட்டு.. வா..மார்க்கெட்டுக்கு போகணும்.புண்ணாக்கு ஊறப் போட்டாச்சா.. இல்லாட்டி அதையும் வாங்கிட்டு வா...’

‘ ஏய் , வாத்தியாரம்மா எங்கே போனே ? கோழிய பிடிச்சுட்டியா ’‘ ...எழுபத்தைந்து வயது பாட்டி, கூவிக்கொண்டே ,கால்முறிவு அறுவை சிகிச்சை கொண்டதால் ஒரு காலை வலுவாக ஊன்றி ஊன்றி தாங்கி நடந்து கொண்டே புறக்கடைக்கு செல்ல.. ‘ என்னம்மா நீயி, அப்பவே நான் பிடிச்சு வைசுட்டேன்ல, சீக்கிரம் வருவியா ...அடடா ...துள்ரதை பாரு...அடேய் மருதா , செத்த இதே பிடி...’ ....; போம்மா போ. நான் கடைக்குபோவனும், மாடு குளிப்பாடனும் கொள்ள வேலை இருக்கு...’ ‘சரி, சரி....யம்மா லட்சுமியம்மா நீங்கதான் பிடிங்க...அந்த அருவாமனையத்தான் அப்படியே எடுத்துட்டு வாங்க...என் பாட்டியை விளிக்க, அதுவும் முனகிக் கொண்டே... ‘ என்ன பண்றது ! ம்ம்ம் ....கறி சாப்பிடாத பிள்ளைய கட்டிவந்து கறி சாப்பிடறவனுக்கு சமைக்கச் சொன்னா ... பாவம் அது காலேஜ்ல படிச்சது...பாதிய்லேயே கல்யாணம்... இதைச் சொன்னாலே அழுவுது...பேரனுக்கு இன்னும் நாமதான் சமைச்சு போடணும்... திண்டுக்கல் கறியில உப்புக் கண்டம் போட்டு பொரிச்சு வச்சா அப்படி சாப்பிடுமாக்கும்.... எல்லாம் கொடுப்பினை வேணும்... பாட்டியின் இந்த முணுமுணுப்பு என் காதில் விழ , இந்த எழுபது வயதிலும் இவங்களுக்கு எப்படி, இப்படி திரியிற உசுர புடிச்சு , கொடூரம்மா ..சாப்பிடற ஆசை வருது... சே,சே நினைக்கவே மனசு தாங்கல ..சரிதான் இன்னைக்கு பின் கொட்டம் ...ஒரு கொலைக்க்களம்தான்...என்ன மனுஷங்க...!. இது நான்.
‘ டேய் ! மஞ்சள் அரைச்சது எங்கடா ?;... ‘சின்ன தட்டுல இருக்கு பாருங்க... ‘ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன் .. அங்கு சோலி முடிஞ்சுது...சின்ன சின்ன சிறகுகள் கீழே விழுந்திருந்ததை கைகளினால் அப்புறப் படுத்திவிட்டு , தோல் நீக்கி மஞ்சள் பூசும் வேலை.... உள்ளுக்குள் நான் ‘ கர்மம்,கர்மம் என புகைந்துகொண்டு மாலை வரை அந்தப் பக்கமே போகக் கூடாது என எண்ணிக் கொண்டு சைவ சமையல் கத்திரிக்காய், முருங்கக் காய் போட்ட சாம்பார், பீன்ஸ் பொறியல் வைத்து விட்டு, இட்லி, சட்னி சகிதம் சாப்பாடு மேசையில் வைத்து விட்டு குளிக்கச் சென்றேன். இனி அந்த இரண்டு மூதாட்டிகளுக்குத்தான் அடுப்பில் வேலை. அரைமணி சென்றிருக்கும் .. அதன் வாடையை சகிக்காது தவிர்க்க எண்ணி முன் பக்கத்து திண்ணையில் வந்தமர்ந்து கொண்டு அந்த வார ஆனந்த விகடனை புரட்டலானேன்,
‘ ஆத்தா... அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன்..பக்கத்துக்கு வீட்டு கூலுபிள்ளை .. வந்தார்.. என்னைத் தாண்டி பின்புறம் போகாமல் கண்களை மட்டும் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தார் . அவருக்கும் அப்போது அறுபது வயதுக்கு மேல் இருக்கும் , ஆஜானுபாகான உடம்பு. நான் , ‘ என்ன தேடறீங்க ..’ அவர் பார்வை எதையோ துருவிக் கொண்டிருந்தாலும் பேச்சு சரியாகத்தான் இருக்கும்.’
‘ ஒன்னுமில்லப்பா... இந்த ராசா பையன் தொல்ல தாங்கல..விக்கறதுக்கு வச்சிருந்த கோழியை திறந்துட்டான்... நல்ல செவத்த கோழி .. அது இங்க திரியுதாணு பாக்க வந்தேன்..’
‘இல்லையே ! அப்பவே எங்க கோழி குஞ்செல்லாம் திறந்துட்டாச்சு...எல்லாம் வெளில மேயுது..அதோட சேர்ந்திருக்கா பாருங்க....’
பக்கத்துல வைக்கப் படப்பு வரைக்கும் போய் பார்த்துட்டேன்...காணலியே..
இதைக் கேட்டுக் கொண்டே பாட்டி உள்ளிருந்து வந்தார்... ‘ கூலு ! அதுக்கு என்ன தெரியும்னு அதுக்கிட்ட பேசிட்டிருக்கே.. மருதன் வருவான் , அவனைக் கேளு என்று மறித்து சொல்ல... அவர்...’சரி சரி கண்டீங்கன்ன அடைச்சு வைங்க ..’ என்று சொல்லிச் சென்றார். உடனே காலைத் தாங்கி ஊன்றி ஊன்றி வேகமாக பாட்டி உள்ளே சென்றுவிட்டது. என்னமோ ஒரு நினைவில் நானும் உள்ளே வர ... கை ஜாடையால் இரண்டு கிழவிகளும் பேசுவதைக் கண்டு அருகே சென்றேன்.. அங்கே பின் கொட்டத்தில் வேகம் ,வேகமாக உதிர்ந்த சிறகுகளை வாத்தியாரம்மா களைந்து சுத்தம் செய்ய , பாட்டி பின் தாழ்வாரத்தில் எதையோ குனிந்து தேட .. கவித்திருந்த கடவுப் பொட்டியைத் திறக்க சாம்பக் கோழி ...! காவு நாங்க கொடுக்க இருந்த கோழி எகிறிப் பறந்தது.... ‘ ‘வாத்தியாரம்மா ஏன் இப்படி செஞ்ச... ‘....என்னம்மா நீதானே அந்தக் கோழியைப் பிடின்னு சொன்னே...!' எனக்கு எல்லாம் விளங்கியது...அவர்கள் அறியாமல் கூளுபிள்ளை வீட்டு கோழியை சமைத்தது.. நான் யாரிடம் என்ன சொல்ல ! எதைச் சொல்ல... ! கமுக்கமாய் மூவரும் இருந்து கொண்டோம்...இதை சொல்வது கேவலம் என்று வீட்டில் மற்றவருக்கும் தெரியப் படுத்தல... பெரிசுக நடந்துகிட்டதை நினைச்சா சிரிக்கவும் தோனல..கோபமும் வரல...என்ன பண்றது.


கோதை தனபாலன் .

No comments:

Post a Comment