Wednesday, September 19, 2012

பிள்ளையார்



பிள்ளையார் ! இந்தப் பிள்ளை யார் ? மனமே நீ சுவையாக அசை போடுகிறாயே. இந்த மராட்டிய இறக்குமதி தெய்வத்திற்கு வயது வரம்பில்லாமல் பக்தி செலுத்தும் ஞான பூமிதான் இந்த பாரதம். திருவிழாவோ, பண்டிகையோ சொல்லி நாம் புதுசு அடைவது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்தப் பிள்ளையாண்டனுக்குத்தான் எத்தனை எத்தனை விதமான படையல்கள்; அலங்காரங்கள்; இனிய வரலாறுகள்; அருமையான பாடல்கள்! ஒவ்வொரு விருப்பத்திற்கும் உண்டான தெய்வங்கள் பல உண
்டு; ஆனால் விருப்பப்படியெல்லாம் அழைக்கப்படுபவன் இவன் ஒருவனே. அருளும் விதமோ ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுதான். இவனுக்கென்று கோயில் கேட்கமாட்டான். கட்டும் கோயில்களில் எல்லாம் ஒரு சிறு பங்கு வாங்கிக் கொள்வான். ஆத்தோரம் கண்டால் விடமாட்டான்; அங்கேயே ஒரு அரசமரமோ,ஆலமரமோ கண்டு யோகமூர்தியாய் உட்கார்ந்து விடுவான். தினம் ஒரு குடம் தண்ணீர் ஊற்றச்சொல்லியே மனம் குளிர்வான்,வேண்டும் வரம் தருவான். அதோடு விடுவானா, மலையைக் குடைந்தும், அதன் உச்சி மீதும் அமர்ந்து கொள்ளும் உச்சிப் பிள்ளையார் இவன். இவனை சைவமோ,வைணவமோ முழு உரிமை கொண்டாடாதபடி பாதுகாத்துக் கொள்வதில் தந்திரகாரன்; சமர்த்தன். சிவத்தலங்களில் நெற்றிப் பட்டையோடு எப்பொழுதும் காட்சி அளிப்பவன் அழகர் கோயிலில் நெற்றியில் ராமத்துடன் காட்சி அளிப்பான். குறைகளை இவனிடம் சொல்லப் போனால் தனது பார்வையாலே நம் குறைகளை ஒரூ கணம் மறந்து விடச் செய்யும் உன்னத தெய்வம் இவன்! பெரும் வயிறு கொண்ட இந்த யானை முகத்தோனுக்கு ஒரு சின்ன எலி வாகனமாம். வேடிக்கையான கலியுக விந்தை தெய்வம் இவனே. தொட்டது துலங்க பிடித்து வைக்கும் மஞ்சள் பிடிப்பிலும் எழுந்தருளி காட்சி தருபவன், அருள் புரிபவன் இவன் ஒருவனே ! இந்த ஞான சித்து விளையாட்டு கொண்ட தெய்வத்தை இந்த நன்னாளில் நாம் இனிதே உள்ளம் குளிர்ந்தே வணங்குவோம்.


கோதைதனபாலன் சுய அனுபவம்: 



இன்று ஊரே கோலாகலமாய் கொண்டாடும் பிள்ளையார் சதுர்த்தி விழாவில்
ஞான மூர்த்தி பிள்ளையாரின் சித்து விளையாட்டு ஒன்று, என் வாழ்வின் ஒரு மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்து விட்டதை பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒன்றும் பெரிய , தவறாது மந்திரம் சொல்லி, விரதம் கடைப்பிடிக்கும் பக்தை அல்ல. சாதாரணமாய் சிறு வயதில் வெள்ளிக் கிழமையானால் பிள்ளையார் கோயிலுக்கு அம்மாவின் கட்டளைப் படி விளக்கிற்கு எண்ணெய் ஊற்றி வந்திருக்
கிறேன். பிள்ளையார் சுழி போட்டு எதையும் எழுதத் தொடங்குவேன். மற்றபடி ஒரு தெய்வத்தின் மீது பயத்துடன் கூடிய ஒரு பக்திக்கு மேல் பெரிதான காரியங்கள் நான் செய்ததில்லை. இப்படியிருக்கையில் சில வருடங்களுக்கு முன்னால் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கு ஏதாவது என்னால் ஆனது செய்யலாம் என்ற எண்ணத்தோடு, ஆசை மேலிட கோயிலுக்குச் சென்றேன். அர்ச்சகரிடம் பணிவாக என் விருப்பத்தை சொல்லலானேன். ‘கோயிலில் எல்லாம் வேண்டுவன வைத்திருப்பீர்கள்; இருந்தாலும் நானும் ஒன்று பிள்ளையாருக்கு வாங்கி வைக்க ஆசைப் படுகிறேன். பூஜை சாமானம் ஏதும் குறிப்பிட்டது வேண்டுமா’ என்று கேட்க, அவர், ‘வேண்டாம் அவையெல்லாம் இருக்கிறது.’ ‘சரி, அப்போ அலங்காரத்துக்கான வெள்ளியிலான பொருள் வேண்டுமா ‘ அவையும் வேண்டுமளவு உள்ளது.’ ‘கண்கள், தந்தம் இந்த உறுப்புகளுக்கான வெள்ளி
அணிகலன் வாங்கித் தரலாமா/’... ‘எல்லாமே இருக்கிறது.’ என்றார். நாங்கள் குழம்பி விட்டோம். ‘சரி என்னதான், ஏதாவது சொல்லுங்கள் முடிந்ததைச் செய்கிறோம்;, என்று கேட்க அவர் சொன்னது என்னையும் என்னுடன் வந்தவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. அவர் சொன்னது, ‘விக்கிரகத்திற்கு சாற்ற துணி இல்லை, திரையும் இல்லை; அவற்றை வேண்டுமானால் வாங்கிக் கொடுங்கள்’ மனதிற்குள் சிரிப்பு மேலிட்டாலும் மனமகிழ்ந்து அவரிடமே அளவு கேட்டு ,மறுநாள் இரண்டையும் வாங்கிக் கொடுத்து வந்தோம். தையல் கூலியும் நாங்களே தருவதாகவும் சொல்லி பொறுப்பை அவரிடமே விட்டு விட்டு பிள்ளையாரை வணங்கி வந்தோம். பின்னர் அந்த வார இறுதியில் ஒரு சனிக்கிழமை என்று நினைக்கிறேன் ,கோயிலுக்குச் சென்று உள்ளே ஒரு வலம் வரும்போது எங்கள் நெஞ்சம் விம்மியது. அது ஒரு வகை பரவசத்தால். ஆமாம், அன்று அங்கிருந்த பிள்ளையார் மட்டுமல்ல, ஆஞ்சநேயரும் ,முருகரும், துர்க்கையும் நாங்கள் தந்திருந்த துணியினால் ஆன அலங்காரத்துடன் காட்சி அளித்தனர். ஒரு தெய்வத்திற்கென்று நினைத்துச் செய்ய, ஏனைய பரிவார தெய்வங்களும் அதை மகிழ்வுடன் ஏற்றிருந்த காட்சி, பிள்ளையாரின் திருவிளையாடல்தானே!
அவனது ஞானத்தின் பெருமையை அவன் , அன்று எங்களை உணர வைத்தான்.
  





















No comments:

Post a Comment