Friday, January 10, 2014

 
செய்வது அறியாச் சிறு நாயேன்
செம்பொன் பாதம் மலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும்
பெறுதற்கு உரியேன் பொய் இலா
மெய்யர் வெறியார் மலர்ப் பாதம்
மேவக் கண்டும் கேட்டிருந்தும் 

பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு 
இருப்பது ஆனேன் போர் ஏறே 

.... திருவாசகம் 

பொறி வாயில்களான ஐந்து வழிய யானைகளையும் அழிக்கின்ற போரில் அரி ஏறுபோன்றவனே! பொய்யாகிய உலக வாழ்வில் பற்றற்ற மெய்யன்பர்கள் நறுமணம் கமழும் தாமரை மலரொத்த திருவடிகளை அடைதலை நேரில் கண்டிருந்தும், நீ அறிவுறுத்தியருளக் கேட்டிருந்தும், அந்நெறியிற் செல்லமாட்டாது பொய்யாகிய உடலோடு வாழும் உலக வாழ்க்கையை உடையேனாகிய யான் இவ்வுடலைப் பேணும் பொருட்டு உண்டும் உடுத்தும் இருப்பவனாயினேன். இதனை நீக்குதற்கு செய்யத்தக்கது இன்னதென்று அறிந்து கொள்ள இயலாது சிறுமையான நாய் போன்ற நான் , உனது சிவந்த பொன் போன்ற திருவடி மலர்களைக் காணும் பேறு இல்லாத பொய்யான உலக வாழ்க்கை வாழ்கின்றவர்கள் பெறத்தக்க துன்பப் பேறுகள் அத்தனையும் பெறுவதற்குரியவன் ஆகிறேன்.


கோதை தனபாலன்  

No comments:

Post a Comment