Showing posts with label பாசுரம். Show all posts
Showing posts with label பாசுரம். Show all posts

Thursday, February 9, 2012

குலசேகர ஆழ்வார்

 
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரகம் யான்வேண்டேன் 
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே


அளப்பரிய செல்வங்கள் பெற்று , சேவகர்களும்,தேவகண்ணியர் பலரும் சுற்றி நின்று சேவிக்க விண்ணை ஆளும் யோகமானாலும் சரி, செல்வாக்கோடு பூமியாளும் யோகமானாளும் சரி அதை என் மனது வேண்டாது.மாறாக, தேன்
சொரிந்து நிற்கும் பூக்கள் பலவும் மலரும் சோலையுள்ள திருவேங்கட மலை மீதிருக்கும் சிறிய அளவினதாயினும் நீரூற்றுடைய சுனை எனும் நீர் நிலையில் சிறு மீனாய் பிறக்கும் பிறவியையே வேண்டி நிற்கிறேன்.





குலசேகர ஆழ்வார் தன் பக்தியில் எல்லோரையும் மிஞ்சி விட்டாரோ என்று நினைக்க வைக்கிறது இந்த பாசுரம். திருமால் உறையும் திருமலையில் பொய்கையில் மீனாய் பிறந்து அவன் திருவடி ஒன்றையே தான் போற்றும் பேராய் கருதி நிற்கிறார்.




கோதைதனபாலன்



 

Friday, February 3, 2012

பெரியாழ்வார்

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
         நிறமெழ  உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
        மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
       என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா
     என்னுயிர்    காவலனே. 
    ...பெரியாழ்வார் பாசுரம்                                                     .



உரை  கல்  ஒன்றின் மீது தங்கத்தை உரசி அதன் சுடர் விடும் நிறம் பார்த்து அதன் மதிப்பை போற்றுவர். இது போலவே கார்மேக வண்ணனே ! உன் நாமங்களை என் நாவில்  எஞ்ஞான்றும் சொல்லி சொல்லி நனி உயர்வாக்கி, உள்ளத்தே செலுத்தி எனது சித்தத்தை உனக்கே சீராக்கினேன். என் உயிர் காப்பவனே ! உன்னுள் என் சித்தம் கிடப்பது உண்மை போல் நீயும் என்னுள் கிடப்பதும் உண்மையே ,


கோதைதனபாலன்.