Friday, January 3, 2014

பெரிசுகளின் அட்டகாசம்...

‘அக்கா, பால் கறக்க கார்மேகம் வந்தாச்சு..!
‘இந்தா வர்றேன்...ஒரு சொம்பு எடுத்துக் கொண்டு கொடுக்க , கறந்த பாலையும் வாங்கி... சில்லறைக்கு ஊத்தற கணக்கை வெளியேற்றி விட்டு..
‘மருதா, கன்றை நல்லா மோதவிட்டு, சற்று துள்ளவ
ிட்டு கட்டு... மாட்டுக்கு இரைய அள்ளி வச்சுட்டு வா.. புண்ணாக்கு ஊறப்போடனும், மார்கெட்டுக்கு வேற போகணும்..
எனக்கு அடுப்புல வேலை .. சீக்கிரம் சட்னியை அரைச்சு கொடுத்துட்டு , அப்புறம் அவங்களுக்கு அந்த மஞ்சள் தனியாக கொஞ்சம், மிளகாய் மல்லி சீரகம் தனியா அரைச்சுக் கொடு... ஆமாம் அப்போதெல்லாம் மிக்சி இல்லை... கட்டளைகளை பிறப்பித்துவிட்டு காலை டிபன் இட்லி ஊத்தலானேன். இப்படி ஒன்பது , பத்துமணிக்குனு டிபன் சாப்பிட்டா மதியத்துக்கு எனக்கு சைவம் தனியா , அவங்களுக்கு அசைவம் தனியான்னு வேலை எப்ப முடியறது... என்று மனம் சலிக்க, பாட்டி... பாட்டி... ஊரிலிருந்து ஒரு உறவுகாரர் வந்திருந்தார்.. ‘ நீங்க வாத்தியாரம்மாவோட பார்க்கற வேலையைப் பாருங்க.. எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. அந்த பாட்டிக்கு விபரம் தெரியும்.. என்று என் உள்ளிருப்பு வேலைகளைக் கவனிக்கலானேன்.
‘அக்கா ! மருதன் கூப்பிட்டான்...
‘அரைச்சுட்டேன்.. எல்லாம் எங்க வைக்கறது..மஞ்சளை மட்டும் அங்கேயே அந்த பிளாஸ்டிக் தட்டில் வச்சுட்டு மத்தத்தை எடுத்துட்டு வா...’ அப்புறம் அந்தக் கோழி, குஞ்செல்லாம் திறந்து வெளில விடு.. கொஞ்சம் வெங்காயத்தையும், சோறு இந்தா அதுக்கு போட்டுட்டு.. வா..மார்க்கெட்டுக்கு போகணும்.புண்ணாக்கு ஊறப் போட்டாச்சா.. இல்லாட்டி அதையும் வாங்கிட்டு வா...’

‘ ஏய் , வாத்தியாரம்மா எங்கே போனே ? கோழிய பிடிச்சுட்டியா ’‘ ...எழுபத்தைந்து வயது பாட்டி, கூவிக்கொண்டே ,கால்முறிவு அறுவை சிகிச்சை கொண்டதால் ஒரு காலை வலுவாக ஊன்றி ஊன்றி தாங்கி நடந்து கொண்டே புறக்கடைக்கு செல்ல.. ‘ என்னம்மா நீயி, அப்பவே நான் பிடிச்சு வைசுட்டேன்ல, சீக்கிரம் வருவியா ...அடடா ...துள்ரதை பாரு...அடேய் மருதா , செத்த இதே பிடி...’ ....; போம்மா போ. நான் கடைக்குபோவனும், மாடு குளிப்பாடனும் கொள்ள வேலை இருக்கு...’ ‘சரி, சரி....யம்மா லட்சுமியம்மா நீங்கதான் பிடிங்க...அந்த அருவாமனையத்தான் அப்படியே எடுத்துட்டு வாங்க...என் பாட்டியை விளிக்க, அதுவும் முனகிக் கொண்டே... ‘ என்ன பண்றது ! ம்ம்ம் ....கறி சாப்பிடாத பிள்ளைய கட்டிவந்து கறி சாப்பிடறவனுக்கு சமைக்கச் சொன்னா ... பாவம் அது காலேஜ்ல படிச்சது...பாதிய்லேயே கல்யாணம்... இதைச் சொன்னாலே அழுவுது...பேரனுக்கு இன்னும் நாமதான் சமைச்சு போடணும்... திண்டுக்கல் கறியில உப்புக் கண்டம் போட்டு பொரிச்சு வச்சா அப்படி சாப்பிடுமாக்கும்.... எல்லாம் கொடுப்பினை வேணும்... பாட்டியின் இந்த முணுமுணுப்பு என் காதில் விழ , இந்த எழுபது வயதிலும் இவங்களுக்கு எப்படி, இப்படி திரியிற உசுர புடிச்சு , கொடூரம்மா ..சாப்பிடற ஆசை வருது... சே,சே நினைக்கவே மனசு தாங்கல ..சரிதான் இன்னைக்கு பின் கொட்டம் ...ஒரு கொலைக்க்களம்தான்...என்ன மனுஷங்க...!. இது நான்.
‘ டேய் ! மஞ்சள் அரைச்சது எங்கடா ?;... ‘சின்ன தட்டுல இருக்கு பாருங்க... ‘ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன் .. அங்கு சோலி முடிஞ்சுது...சின்ன சின்ன சிறகுகள் கீழே விழுந்திருந்ததை கைகளினால் அப்புறப் படுத்திவிட்டு , தோல் நீக்கி மஞ்சள் பூசும் வேலை.... உள்ளுக்குள் நான் ‘ கர்மம்,கர்மம் என புகைந்துகொண்டு மாலை வரை அந்தப் பக்கமே போகக் கூடாது என எண்ணிக் கொண்டு சைவ சமையல் கத்திரிக்காய், முருங்கக் காய் போட்ட சாம்பார், பீன்ஸ் பொறியல் வைத்து விட்டு, இட்லி, சட்னி சகிதம் சாப்பாடு மேசையில் வைத்து விட்டு குளிக்கச் சென்றேன். இனி அந்த இரண்டு மூதாட்டிகளுக்குத்தான் அடுப்பில் வேலை. அரைமணி சென்றிருக்கும் .. அதன் வாடையை சகிக்காது தவிர்க்க எண்ணி முன் பக்கத்து திண்ணையில் வந்தமர்ந்து கொண்டு அந்த வார ஆனந்த விகடனை புரட்டலானேன்,
‘ ஆத்தா... அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன்..பக்கத்துக்கு வீட்டு கூலுபிள்ளை .. வந்தார்.. என்னைத் தாண்டி பின்புறம் போகாமல் கண்களை மட்டும் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தார் . அவருக்கும் அப்போது அறுபது வயதுக்கு மேல் இருக்கும் , ஆஜானுபாகான உடம்பு. நான் , ‘ என்ன தேடறீங்க ..’ அவர் பார்வை எதையோ துருவிக் கொண்டிருந்தாலும் பேச்சு சரியாகத்தான் இருக்கும்.’
‘ ஒன்னுமில்லப்பா... இந்த ராசா பையன் தொல்ல தாங்கல..விக்கறதுக்கு வச்சிருந்த கோழியை திறந்துட்டான்... நல்ல செவத்த கோழி .. அது இங்க திரியுதாணு பாக்க வந்தேன்..’
‘இல்லையே ! அப்பவே எங்க கோழி குஞ்செல்லாம் திறந்துட்டாச்சு...எல்லாம் வெளில மேயுது..அதோட சேர்ந்திருக்கா பாருங்க....’
பக்கத்துல வைக்கப் படப்பு வரைக்கும் போய் பார்த்துட்டேன்...காணலியே..
இதைக் கேட்டுக் கொண்டே பாட்டி உள்ளிருந்து வந்தார்... ‘ கூலு ! அதுக்கு என்ன தெரியும்னு அதுக்கிட்ட பேசிட்டிருக்கே.. மருதன் வருவான் , அவனைக் கேளு என்று மறித்து சொல்ல... அவர்...’சரி சரி கண்டீங்கன்ன அடைச்சு வைங்க ..’ என்று சொல்லிச் சென்றார். உடனே காலைத் தாங்கி ஊன்றி ஊன்றி வேகமாக பாட்டி உள்ளே சென்றுவிட்டது. என்னமோ ஒரு நினைவில் நானும் உள்ளே வர ... கை ஜாடையால் இரண்டு கிழவிகளும் பேசுவதைக் கண்டு அருகே சென்றேன்.. அங்கே பின் கொட்டத்தில் வேகம் ,வேகமாக உதிர்ந்த சிறகுகளை வாத்தியாரம்மா களைந்து சுத்தம் செய்ய , பாட்டி பின் தாழ்வாரத்தில் எதையோ குனிந்து தேட .. கவித்திருந்த கடவுப் பொட்டியைத் திறக்க சாம்பக் கோழி ...! காவு நாங்க கொடுக்க இருந்த கோழி எகிறிப் பறந்தது.... ‘ ‘வாத்தியாரம்மா ஏன் இப்படி செஞ்ச... ‘....என்னம்மா நீதானே அந்தக் கோழியைப் பிடின்னு சொன்னே...!' எனக்கு எல்லாம் விளங்கியது...அவர்கள் அறியாமல் கூளுபிள்ளை வீட்டு கோழியை சமைத்தது.. நான் யாரிடம் என்ன சொல்ல ! எதைச் சொல்ல... ! கமுக்கமாய் மூவரும் இருந்து கொண்டோம்...இதை சொல்வது கேவலம் என்று வீட்டில் மற்றவருக்கும் தெரியப் படுத்தல... பெரிசுக நடந்துகிட்டதை நினைச்சா சிரிக்கவும் தோனல..கோபமும் வரல...என்ன பண்றது.


கோதை தனபாலன் .

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல.. .. //



‘குமார் ..!’
‘இதோ வந்துட்டேன் ஐயா ..!’
‘இந்தா இந்த ஃபைல எல்லாம் எடுத்து கட்டு.. வண்டில எடுத்து வை. ‘ டிரைவர் கோவிந்தனை ரெடியா ஜீப்ல ஆபீசெர்ஸ் எல்லாத்தையும் அழைத்து வர சொல்லு. சரிய
ா பத்துமணிக்கு கேம்ப் கிளம்பியாகணும்.’
இது முத்துசாமி கமிஷனர். ஒரு உயர் நிலை அதிகாரி.
தங்கள் படிப்புக்கு பெருமை சேர்க்க அன்று அரசு வேலைக்கு சேர்ந்து பணியாற்றும் தன்மைத்தவரில் இவரும் ஒருவர்.

'சரி லீலா ! நான் ஆபீஸ் கிளம்பறேன். அவள் கொண்டு வந்த காபி குடித்து விட்டு , பூட்ஸ் மாட்ட ,
லீலா... ‘ கேம்ப் போனால் நேரம் ஆகிடுமா..இரவு நேரம் சென்றிடுமா.. பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர வண்டி.. .... ‘ ஏற்பாடு பண்றேன்.. தெரிந்த ஆட்டோவை டயத்துக்கு அனுப்பி வைக்கிறேன்.

கேம்பில்..கெடுபிடி. வேண்டியவை சிக்கியது... அரசுக்கு இவர்போன்ற அதிகாரிகளால் வரி வருமானம் பாக்கி இல்லாமல் வசூலாகிறது. மாநில வருமானம் ..மற்ற துறை ஊழியருக்கும் சம்பளம் போட பயன்படுத்தப் படும். இவையெல்லாம் அரசு கணக்குகள்.இவற்றை எல்லாம் லீலா உணர்ந்தே இருந்தாள். அவளிடம் முத்துசாமி ஆபீஸ் விஷயங்களைப் பற்றி பேசுவதுண்டு. அவளும் படித்தவளாதலால் புரிந்து கொள்ளுவாள். மத்திய அரசு அதிகாரி, மாநில அரசு அதிகாரிகள் ஒருவருக்கொருவர் செயல்பாடுகளை எப்படி புரிதலுடன் நடத்துகின்றனர் என்றெல்லாம் அவளிடம் சொல்லி விளக்குவார். சிலநேரம் இவளும் அவரிடம் வாதம் பண்ணுவாள். ‘ இந்த அரசு இத்தனை கோடி ரூபாய்க்கு டார்ஜெட் வைத்துள்ளது ..’ முத்துசாமி.. ;
இப்படியே டார்ஜெட்...ஐ உயர்த்திப் போனால் அவனவன் செய்யும் தொழிலை விட்டு விடமாட்டானா.. அப்படி நின்று விட்டால்.. வேலை யார் கொடுப்பார்கள்..’ லீலா கூறுவாள். ‘கறுப்பு பணம் சேரக் கூடாது..அதுதான் கணக்கு..’ ..இது முத்துசாமி ‘
‘அதற்குத்தான்..கோயில், பள்ளி, அநாதை விடுதி, மருத்துவமனை போன்றவற்றை அவர்கள் நிர்வகித்து வந்தால் வரி விலக்கு கொடுக்கிறீர்கள்... அதற்கு மேலுமா கறுப்பு பணம் சேரும்..’ .. லீலா
‘நீ எதெடுத்தாலும் வித்தியாசமா யோசிக்கிற.. எல்லாருமே என்னைப் போல் இருக்க மாட்டார்கள்.’
இப்படி அவர்கள் பேச்சு சமூகத்தைச் சார்ந்ததாய் இருக்கும்.

முத்துசாமி கூறியது லீலாவுக்கு உணர்த்த அந்த நாளும் வந்தது. ஒரு நாள் மாலையில் முன்னிருட்டு நேரம் பலத்த சிந்தனையோடு வந்த கணவரை.. அவள் ஒன்றும் கேட்கவில்லை. பிள்ளைகளிடமும் அவர் சரியாக முகம் காட்டி சிரிக்க வில்லை என்பதை உணர்ந்தாள். சரி தானாக சொல்லட்டும் என்று வாளாவிருந்தாள். மறுநாள் அவர் ஆபீஸ் செல்லாமல் வீட்டிலிருந்தே ஃபைலில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார். மதியம்போல் லீலாவிடம் தன் மனத்தாங்கலை வெளியிடலானார்.

‘லீலா! எவ்வளவு ஆசையாக இந்த வேலையில் சேர்ந்தேன். இந்த அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பொறுப்பில்லாமல் நடக்கிறார்கள். ஜனங்களை முட்டாளாக்கி சோம்பேறி களாக்குகிறார்கள். இன்றைக்கு இந்த புதியஅரசில் இந்தத்துறை மந்திரி பணம் சி.எம் கேட்கிறார் என்று எல்லை மீறி வசூல் பண்ணச் சொல்கிறார். இந்தத்துறைக்கு மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் இதே நிலைமை. நான் உள்பட ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்று தொகை நிர்ணயம் பண்ணியுள்ளனர். எனது பெரிய அதிகாரி கூப்பிட்டு சொல்லி விட்டார். எல்லாம் வரும் தேர்தலில் நல்லபேர் எடுக்கனும்னு ஒரே குறிக்கோள்ள எல்லாரும் நிற்கின்றனர். மக்கள் நலத் திட்டங்கள் யாவுமே இதனால் கிடப்பில் தூங்குகின்றன. என் மனது தாங்கல.... கஷ்டமா இருக்கு.
லீலாவிற்கு அவள் கணவன் பற்றி தெரியும்... அந்த நேர்மையை அவளும் விரும்புவாள். ஒருமுறை முத்துசாமி பெயரை சொல்லி கீழ்நிலை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியுள்ளார். சில மாதம் கழித்து கொடுத்தவர் இவரிடம் வந்து இதுபோல் நடந்தது... தங்களுக்கு பணம் சேர்ந்ததா என கேட்க.. இவர் வெகுண்டு..’ ஏய்யா! உங்களுக்கு சம்பாதிக்கதான் தெரியுதே ஒழிய ஆளை பணவிஷயத்தில் சரியாக எடைபோடறதில்ல...எல்லாருமே ஓரே மாதிரி லஞ்சம் வாங்கறவங்கனு நினைக்காதே, வந்தவர்,

‘சார் ! அப்படின்னா அந்த அதிகாரிக்கிட்ட நான் தந்த 50,000 ரூபாய் கொஞ்சம் வாங்கித் தந்திடுங்களேன். உடனே இவர் காரமாக உங்க எச்சிபுத்தி உங்களை விட்டுப் போகாது...போ.போ..யார்கிட்ட கொடுத்தியோ அவன்கிட்டே நீயே போய் கேளு... நீ க ட்டவேண்டியதை கட்டிடு..வேறு வழி இல்லை ‘ என்று சொல்லி அனுப்பியது அவள் மனதில் கணநேரம் தோன்றி மறைந்தது.
‘ சரி, இப்ப இதற்கு என்ன செய்றதா உத்தேசம்...பேசாமல் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்களேன்..’
‘ அது சரிப்படாது , தேர்தல் வர்றவரைக்கும் இது செல்லும்... சாயந்தரம்..கீழ் உள்ள ஆபீசர்ஸ் ..ஐ வர சொல்லியிருக்கேன் ... டீ ரெடி பண்ணு. அவர்களும் வந்தனர்...சம்பாஷனை லீலா காதிலும் விழுந்தது.

‘ இங்க பாருங்க சார்..மந்திரியோ ,சி.எம். ஒ தங்கள் நிலை மாறுவதை இல்லை. அடுத்த அரசு வந்தாலும் இனி இதே நிலைப்பாடுதான். நான் நேரடியாக வசூல்ல இறங்கலை. உங்களுக்கு பதவி உயர்வு, பிடித்த இடத்திற்கு வேலை மாற்றம் உடனடி வேண்டுபவர் இக்காரியம் செய்து நேரிடையாக மேலதிகாரையோ ,மந்திரியையோ கண்டுகொள்ளுங்கள்..தேடிக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை. எதிலும் என் பெயர் கூடாது..’

இவ்வாறு சொல்லி அனுப்பி வைத்தார்.
லீலா, மனதில் பரவாயில்லை... இவரும் எப்படி தீர்க்கமாய் சொல்லிவிட்டார்.. இதில் ஜெய்ப்பது என்ற நிலைப்பாடு இல்லை. தான் கொண்ட கொள்கையில் தவறாத நிலைக்கு தன மனதில் செய்துகொண்ட ...அறம் சார்ந்து ஒரு உடன்படிக்கை... ! அவர் கையில் கரைபடவில்லை. அவள் மனம் பூரித்தது.


கோதை தனபாலன்.
அருமையில் எளிய அழகே போற்றி 
கருமுகில் ஆகிய கண்ணே போற்றி 
மன்னிய திருஅருள் மலையே போற்றி 
என்னையும் ஒருவன் ஆக்கி இரும் கழல் 
சென்னியில் வைத்த சேவக போற்றி.


...திருவாசகம் .. போற்றித் திருவகவல் திருச்சிற்றம்பலம்



Monday, December 30, 2013

அனுபவ முத்திரைகள்: நான் வாழ்வில் கண்ட மனிதர்கள் ... வாத்தியாரம்மா...!...

அனுபவ முத்திரைகள்: நான் வாழ்வில் கண்ட மனிதர்கள் ... வாத்தியாரம்மா...!...: நான் வாழ்வில் கண்ட மனிதர்கள் ... வாத்தியாரம்மா...! பூர்வ ஜென்ம பந்தம்.  ஆமாம் , இவர் கணவர் பஞ்சாயத்துப் பள்ளியில் வாத்தியார் வேலை பார்த்தத...
நான் வாழ்வில் கண்ட மனிதர்கள் ... வாத்தியாரம்மா...! பூர்வ ஜென்ம பந்தம். 


ஆமாம் , இவர் கணவர் பஞ்சாயத்துப் பள்ளியில் வாத்தியார் வேலை பார்த்ததால் இவரையும் நாங்கள் வாத்தியாரம்மா என்றே அழைப்போம். பிறப்பால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் .. வாழ்க்கை முறைக்கு எங்கள் ஊர் வந்தவர். எனது மாமனார் ஒற்றைச்சடைபோட்டு இவரது கணவரிடம் ஐந்தாம் வகுப்பு படித்த விபரத்திலிருந்து...பின்னாளில் அவர் பஞ்சாயத்து சேர்மனாகி இவர்தம் மருமகளுக்கு டீச்சர் வேலை போட்டு கொடுத்த காலம் வரை ஊர்சங்கதிகளை, மறைந்தது, மறையாதது ; தெரிந்தது தெரியாதது எல்லாம் வந்த மருமகள்களாகிய எங்களிடம் அக்கு வேறாக ஆணி வேறாக சொல்லி வைப்பார்.. ஒன்றும் தெரியாததுபோல் இருந்து கொள்வார். இத்தனை உரிமையும் அவருக்கு எப்படி வந்தது. என் மாமியார் அவருக்கு நல்ல சிநேகிதமானார் அந்த நாளிலிருந்தே. பல இக்கட்டுகளில் அவருக்கு வாத்தியாரம்மா தன கணவர் இறந்தபிறகும் கூட உறுதுனையானார். நம்பிக்கைக்கு பாத்திரமானார். மருத்துவமனைத் தொடர்பு சங்கதிகள் அன்றைக்கு ஒன்பது பேருக்கு மேலிருந்த குடும்பத்தில் நீண்ட நாட்கள் ஒருவர் மாற்றி ஒருவருக்குவந்தால் எவ்வளவு கஷ்டம். வாத்தியாரம்மாதான் அடுப்படியில் அனைத்தும் பார்த்து கொடுப்பார். அவர்தம் எழுபதாவது வயதிலும் வத்தல், வடாம் எதுவானாலும் சலிக்காமல் முட்டிக்கால் வலியோடு தளர் நடை யானாலும் எட்டி வைத்து நடந்து செயல்படும் அழகை நாங்கள் ரசிப்போம். சமையல் காய்கறிகளோ, உணவுகளோ மீதமாவது பிடிக்காது. அதை தன் கைப்பக்குவத்தால் மாற்றி வித்தியாச உணவு படைப்பதில் வல்லவர். கோலங்கள் விதம் விதமாகப் போடுவதில் வல்லவர். பொங்கல் வந்தால் இவர் போடும் கோலங்கள் சாணி மெழுகிய அடுப்படியிலிருந்து வாசல் வரை பிரசித்தம். ஆயில் பேயிண்டில் எங்கள் பூஜை அறையில் இவர்போட்ட கோலத்தை அழிக்க மனமில்லாது இன்னும் வைத்துள்ளேன்.

வளர்ந்த உருவம், கருத்த தேகம், வெள்ளை ரவிக்கை ,தே உடுத்தும் தேவகிரி புடவையோடு சுருண்ட கேசத்தை நேர்த்தியாகக் கொண்டையிட்டு ,அந்தக் காதில் பளிச்சிடும் ஏழு கல்லுத் தோடு சகிதமாய் இருப்பதை நாங்கள்...பார்த்துவிட்டு..இப்பவே நீங்க இப்படியிருந்தா வயசில எப்படி இருக்கமாட்டீங்க ...என்று சொல்லி சிரிக்கையில் ..சற்று நாணியே..’ எத்தனை பேரு பார்த்து நிற்பானுங்க ..போடா கம்மனாட்டி...ருவன். அதெல்லாம் தனத்தம்மாகிட்ட நடக்குமா...! ‘ சொல்லி பெருமை கொள்வார். இரண்டு மகன்கள் குடும்பமும் நன்கு இருக்கையில் அவர்கள் கூட இருப்பதில்லை. எங்க வீட்டில் தான் இருப்பார்..ஒரு வித்தியாசமான முறை என்னவென்றால்...மாதம் பூராவும் எந்த மகனையாவது, மருமகளையாவது திட்டிக் கொண்டும் சபித்துக் கொண்டும் இருப்பவர், அந்த முதல்தேதி பென்ஷன் பணம் வந்ததையும், தான் சீட்டுபோட்டு கிடைத்த பணத்தையும் முதல் வேலையாக மகன் கையில் கொடுத்துவிட்டுதான் வருவார்.

இதில் கண்ணாடி மாட்டி தினம் தினத்தந்தி பேப்பரை படிக்கும் அழகே தனி...புதிது புதிதாக வந்த நலத்திட்டங்களை தன்னைப் போன்றே தனித்திருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்லி ...கலெக்டர் ஆபீஸ் தாசில்தார் ஆபீஸ் என்றெல்லாம் அழைத்துச் சென்று பென்ஷன் வாங்க ஏற்பாடு செய்து புண்ணியம் கட்டிக் கொண்டார். நான் அதிகம் அவர் அருகாமையில் இருந்துள்ளேன். கால்வலி, தலை வலி, மூச்சுக்குத்து என்று உடல் நலக்குறைவிற்கு தனக்குத்தானே கைப்பக்குவமாய் வைத்தியம் பண்ணிக் கொள்வார்......ஒருமுறை தோள்பட்டை, முதுகு வலியால் துடித்தபோது அவர் வேண்டாம் என்று சொன்னதை மீறி நான் நன்கு பிடித்துவிட்டு சுகப்படுத்த பெரிய இடத்துப் புள்ள எனக்கு பிடிச்சுவிடரையேம்மா என்று மனம் நெகிழ்ந்தார்... நான் இதில் என்னம்மா... அத்தை முதற்கொண்டு எங்கள்வரை என்னென்ன கவனம் வைக்கிறீர்கள் எங்கள் மீது என்று சொல்லிடுவேன். பிறகு ஒரு சங்கதி என் மனதை வருத்துவது.. என்னவென்றால்... மனிதர்க்கு நாற்பதில் நாய்குணம் என்பார்கள் . எங்கள் அத்தை விஷயத்தில் நான் கண்டேன்.. சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம்... சனியனே... மூதேவி... இது எங்க போச்சு ... ? ...அதுதான் மருமக சோறு போடாம எடுத்து சாத்தராளுக.. வரதெல்லாம் மகனுகிட்ட கொடுத்துட்டு மூதேவி முடியலைனா இங்க வரது... என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். என் மாமனார் இவற்றை தாங்க முடியாமல் மனசுக்கு பிடிச்சிருந்தா அதை உடன் வைத்துக் கொள்... அல்லது அது மகனிடம் செல்லட்டும் என்பார். ஒரு நாள் காது பொறுக்கமாட்டாமல் அவர்களை வந்து அழைத்துப் போகச் சொல்லிவிட்டார். தன் எண்பத்தைந்தாவது வயதில் அந்த அம்மாள் அப்போதும் எங்கள் அத்தையிடம் பணம் கொஞ்சம் வைத்திருக்கச் சொல்லி கொடுத்துவிட்டு சென்றது. ஆனால் மகனோடு இல்லை. தனியாக ஒரு வலசில் சிறிய அறை ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடையில் உணவு வாங்கி காலம் தள்ளியது.

தொண்ணூற்றிரண்டு வயது ஆகும்போது எங்கள் அத்தைய வரச்சொல்லி அடுத்தடுத்து ஆட்கள் வந்தனர். உயிர்போகாமல் இருபது நாட்களாய் இழுத்துக் கொண்டிருந்தது. ஒருநாள் எங்களிடம் சொல்லிக் கொண்டு எங்கள் அத்தை சென்றார்... அங்கு அது ‘ வா தனம்...என்று சொல்வதற் கூட முடியாது கண்களில் நீர்கசிய ஜாடையில் சொல்ல இவர் சிறிது பால் ... அவர் வாயில் ஊற்ற உயிர் பிரிந்தது.. அத்தையின் கையில் தான் கடைசித் தண்ணி இறங்கனும் என்ற வைராக்கியம்.... அந்த அம்மாவுக்கு... இது அவர்களுக்குள் பல்லாண்டு வந்த நட்பின் உறவுக்கு மேலுள்ள ஒரு பந்தம்தானே... அடிக்கடி என் அத்தை சொல்லுவார் ,மனம் உருகுவார் ... எனக்கும் வாத்தியாரம்மாவிற்கும் ஏதோ பூர்வஜன்மத்துப் பந்தம் உள்ளது என்று... இவரிடம் இருந்த வாத்தியாரம்மா பணம் ... அவர்தம் இறுதிச் செலவுக்கே ஆனது... யார் கையையும் எதிர்பாராத அவரது வைராக்கியம் அன்று என் மனதில் ஆழமாய்ப் பதிந்தது. இன்று எங்கள் அத்தை சொன்ன பூர்வ ஜென்மத்து பந்தம்... அதன் அர்த்தம் விளங்குகிறது. சிலர் வாழ்வில் இதுபோன்ற நட்புகள் உறவைத் தாண்டிய நிலையில் அமையவே செய்கின்றன.... சாகா வரம் பெற்ற உணர்வுகள்.. இடையில் எங்கள் மனதிலும் அது வாழ்கிறதே !


கோதை தனபாலன்.

Friday, September 21, 2012

அனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...

அனுபவ முத்திரைகள்:

கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...
: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்...


கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்களுக்கான சிலை வடிவம் கண்டேன். அதுவரை மறந்து போயிருந்த எனக்கு கருவூருக்கு அருகில் பொன்னர் சங்கர் வாழ்ந்த இடமா
கக் கருதப் படும் வீரப்பூர் என்ற இடத்தில் பழமையின் அடையாளச் சின்னங்களாய் பார்த்த கன்னிமார் தெய்வங்கள் என்ற பெயரில் நடுகற்கள் ஊன்றப்பட்டு அதற்கு வழிபாடு நடந்ததை அறிந்து கொண்ட நினைவு மனதில் அலைமோதியது. பின்னர் யதார்த்த சூழ் நிலையாக நூலத்தில் ஒரு புத்தகம் எடுக்க அதில் இருந்த தகவலை இங்கு பகிர்கின்றேன்.
தமிழ் இலக்கியச் செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் போது, பெண்தெய்வ வழிபாடே ஆதி அந்தமுமாய் வழக்கத்தில் இருந்து வருவதை அறியமுடிகிறது. இவற்றை மூன்று வகையாய் நெறிப்படுத்தலாம். ஆரம்பம் அவர்களை கன்னிமார் ஸ்தானத்தில் வைத்து நடுகற்கள் ஊன்றி கொற்றவை என்ற பெயரில் சக்திதனைக் கூட்டி நம் சங்ககாலம் முந்தைய காலம் தொட்டே வணங்கி வரும் வழிபாடு. இரண்டாவது அதை தாய் ஸ்தானத்திற்கு வைத்து காளி அம்சமாய் வணங்கி வருதல். இது ஆரியக் கலப்பு ஏற்பட்டு ,சமய நல்லிணக்க காலக் கட்டத்தில் ஆரம்பித்து வழிவருதலாகும்.இந்தத் தாய் வழி பாட்டுக்குப் பிறகே இன்னும் சற்று எண்ண உணர்வுகள் மேலிட பத்தினி தெய்வ வழிபாடு தோன்றிற்று.
பழந்தமிழரின் வழிபாடு என்றுமே இயற்கையை அடிப்படையாகக் கொண்டு வருதலாம். அதன் படிக்கு தெய்வத்தின் பெயர்கள், காடுகிழாள், காடு கெழு செல்வி, கொற்றவை , காளி என்றவாறு பல அமைந்துள்ளன. ஏழு கற்கள் ஊன்றப் பட்டு வணங்குதல் இதன் முறைமை. இரண்டாவது நிலையில்,ஆண் தெய்வங்களுடன் இணைக்கப் பட்டு வழிபடும் முறைமை. சிவதுர்கை, விஷ்ணு துர்க்கை என்பதெல்லாம் இதில் அடங்கும். இது பற்றி சிலப்பதிகாரம் முதல் அறிப்படுகிறது. பின் பத்தினி தெய்வமாய் வழிபடும் முறையை அவ்விலக்கியம் தொட்டே அறியலாம். தோழி ஒருத்தி கண்ணகிக்கு இவ்வழிபாடு முறையை ஏற்கும் படி அறிவுறுத்த சமண மதத்தை சார்ந்தவளாகிய அவள் அதை தவிர்த்து விடுவாள். இந்த சமயத்தில்தான் சப்த கன்னிகள் என்பதும், சற்று திரிதலுடன் சப்த மாந்தர்கள்
என்றும் சொல்லப் படுதலாயிற்று. இவற்றின் பெயர்கள் முறையே, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி. பண்டைத் தமிழரிடையே கன்னிமாருக்கு ,உயர்பலி, ரத்தப்பலி கொடுக்கும் பழக்கம் கொடூர முறையில் இருக்க , நாடு விடுதலை பெற்றதும் உயிர் வதை சட்டத் தடுப்பில் வெகுவாக மறைந்து, இன்று சற்று அங்கொன்னும் இங்கொன்னுமாய்க் காணப்படுகிறது. படித்தவர்கள் பெருகி வரும் இந்நாளில் இந்தப் பலியிடும் முறை முழுவதும் மறையலாம்.
 தொடர்ச்சி.... கன்னிமார்கள் தெய்வங்கள் ஏழு 
இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் ,கொற்றவையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இரு சுடர்களுடனே வானிலே திரிபவரான முனிவர்க்கும் அமரர்க்கும் இடர் கெடுமாறு அருளுகின்ற இணையற்ற நின் பாதங்களைத் தொழ
ுதேம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்..

என்ற வரிகள் அவை.


ஒவ்வொரு சக்திக்கும் பெயரும் எழுத்தும் மக்கள் அமைத்தனர்.இச்சக்திகள் இசை பாடுவதையும் இவ்விசையிநின்றே உலகம் படைக்கப்படுகிறதென்றும் கண்டனர்.இவ்வாறு யைவனோடு ஒன்றியே நிற்கும் சக்தியை 'ஆ,ஈ,ஊ,ஏ.ஐ,ஓ,ஔ'என்று ஏழு குறியீடுகளாக அமைத்து இவை எழிசையைக் குறிப்பதாக கருதியதுமன்றி,ஏழு சக்திகளையும் ஏழு கன்னிகைக ளாகவும் திருக்கோயில்களில் சிலை அமைத்து வணங்கினர்.இம்மரபிநின்றே வானத்தில் தோன்றும் விண்மீன் தொகுதிக்கு சப்தரிஷி மண்டலம் என்று பெயர் வந்ததோ எனவும் கருத இடமுண்டாகிறது.உலகத்தில் எங்கும் ஏழு கிழமைகள்தாம் என்பதையும் இங்கு ஒப்பிடலாம்.பின்னர் 'சரி,ரி,க,ம,ப, த,நி'என்ற ஏழு சுவரங்களும் அமைந்தன.
 Pg Ramanan. ..நன்றி.

http://www.harappa.com/script/parpola12.html .....இதில் இது சார்ந்த வரலாற்றுக் கூற்று உள்ளது.

கோதைதனபாலன்
 
அதில் நான் கண்ட விபரம்,மற்றும் நான் அ றிந்தது சொல்கிறேன்.6+1 அருந்ததி என்பது பின்னாளில் ஆரிய கலப்பால் வந்த கதை.முன்னாளில் பரிபாடலில் வரும் அறுவர் என்பது கார்த்திகைப் பெண்களைக் குறிப்பது. செவ்வேள் முருகன் பிறப்பு வளர்ப்பு பாடுகையில் இவ்விளக்கம் வரும்.

முன்னதுக்கு ,சிலப்பதிகாரத்தில் ,'அ றுவருக்கும் இளைய நங்கை...' என்று பயின்று வர இவள் அருந்ததி என அறியலாம். மற்றும் அவர்களினூடே புராணம் சொல்லும் ஆண்தெய்வங்கள் ஏற்றி சப்தமாதர் ஆயிற்று..உருவங்களும் அமையலாயிற்று. ஆனால் நாட்டுப் புறங்களில் போற்றிய கொற்றவையை மட்டும் மாற்ற இயலவில்லை. எனவே அது வன துர்கை என்று வழங்கப் பட்டு நாட்டுப் புறங்களில் நாடு கல் ஊன்றி வணங்கும் வழிபாடே இன்றுவரை நீடிக்கிறது.
 தொடர்ச்சி....   நட்சத்திரம் பற்றி பேசுகையில் சப்தரிஷி மண்டலம் அல்லது கார்த்திகைப் பெண்டிர் நட்சத்திரக் கூட்டம் என்றும் சொல்லுவர். அந்நாளில் துருவ நட்சத்திரம், விடி வெள்ளி இவை அறியப்பட்டிருந்தது.எழும் கன்னிமார் என்று இந்த blog.com..ல் திராவிட முத்திரையோடு அறியப் படுமானால் ஒரு சங்கதியை பகிர்ந்து கொள்கிறேன். பண்டைய ஜோதிட நூலில் ஏழு கிரகங்களே பேசப்பட்டன. ராகு,கேது என்பது இல்லை. பின்னாளில் இந்த இரண்டிற்கும் பிரத்யேக வல்லமையான அமைப்பு தந்து நவ கோள்களாக வர்ணிக்கப் பட்டாலும் இவை இரண்டும் கோள்கள் ஆகா. ஏழு கிரகங்களே உண்மை. மற்றும் 27 நட்சத்திர வரிசை மாறி இருந்தது. கார்த்திகை தொடக்கமே அவை சொல்லப்பட்டு பரணி இறுதியாக வைக்கப்பட்டது. இதை துருவ நாடி பேசும்.சத்யசாரியார் எழுதியது. பின்னாளில் இந்த முறையும் மாற்றி வைக்கப் பட்டுள்ளது.அசுபதி தொடங்கும் நிலை ரேவதி இறுதியாக இன்றளவும்நடை முறையில் உள்ளது.கோதைதனபாலன் 

Photo: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்களுக்கான சிலை வடிவம் கண்டேன். அதுவரை மறந்து போயிருந்த எனக்கு கருவூருக்கு அருகில் பொன்னர் சங்கர் வாழ்ந்த இடமாகக் கருதப் படும் வீரப்பூர் என்ற இடத்தில் பழமையின் அடையாளச் சின்னங்களாய் பார்த்த கன்னிமார் தெய்வங்கள் என்ற பெயரில் நடுகற்கள் ஊன்றப்பட்டு அதற்கு வழிபாடு நடந்ததை அறிந்து கொண்ட நினைவு மனதில் அலைமோதியது. பின்னர் யதார்த்த சூழ் நிலையாக நூலத்தில் ஒரு புத்தகம் எடுக்க அதில் இருந்த தகவலை இங்கு பகிர்கின்றேன்.
தமிழ் இலக்கியச் செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் போது, பெண்தெய்வ வழிபாடே ஆதி அந்தமுமாய் வழக்கத்தில் இருந்து வருவதை அறியமுடிகிறது. இவற்றை மூன்று வகையாய் நெறிப்படுத்தலாம். ஆரம்பம் அவர்களை கன்னிமார் ஸ்தானத்தில் வைத்து நடுகற்கள் ஊன்றி கொற்றவை என்ற பெயரில் சக்திதனைக் கூட்டி நம் சங்ககாலம் முந்தைய காலம் தொட்டே வணங்கி வரும் வழிபாடு. இரண்டாவது அதை தாய் ஸ்தானத்திற்கு வைத்து காளி அம்சமாய் வணங்கி வருதல். இது ஆரியக் கலப்பு ஏற்பட்டு ,சமய நல்லிணக்க காலக் கட்டத்தில் ஆரம்பித்து வழிவருதலாகும்.இந்தத் தாய் வழி பாட்டுக்குப் பிறகே இன்னும் சற்று எண்ண உணர்வுகள் மேலிட பத்தினி தெய்வ வழிபாடு தோன்றிற்று.
பழந்தமிழரின் வழிபாடு என்றுமே இயற்கையை அடிப்படையாகக் கொண்டு வருதலாம். அதன் படிக்கு தெய்வத்தின் பெயர்கள், காடுகிழாள், காடு கெழு செல்வி, கொற்றவை , காளி என்றவாறு பல அமைந்துள்ளன. ஏழு கற்கள் ஊன்றப் பட்டு வணங்குதல் இதன் முறைமை. இரண்டாவது நிலையில்,ஆண் தெய்வங்களுடன் இணைக்கப் பட்டு வழிபடும் முறைமை. சிவதுர்கை, விஷ்ணு துர்க்கை என்பதெல்லாம் இதில் அடங்கும். இது பற்றி சிலப்பதிகாரம் முதல் அறிப்படுகிறது. பின் பத்தினி தெய்வமாய் வழிபடும் முறையை அவ்விலக்கியம் தொட்டே அறியலாம். தோழி ஒருத்தி கண்ணகிக்கு இவ்வழிபாடு முறையை ஏற்கும் படி அறிவுறுத்த சமண மதத்தை சார்ந்தவளாகிய அவள் அதை தவிர்த்து விடுவாள். இந்த சமயத்தில்தான் சப்த கன்னிகள் என்பதும், சற்று திரிதலுடன் சப்த மாந்தர்கள் 
என்றும் சொல்லப் படுதலாயிற்று. இவற்றின் பெயர்கள் முறையே, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி. பண்டைத் தமிழரிடையே கன்னிமாருக்கு ,உயர்பலி, ரத்தப்பலி கொடுக்கும் பழக்கம் கொடூர முறையில் இருக்க , நாடு விடுதலை பெற்றதும் உயிர் வதை சட்டத் தடுப்பில் வெகுவாக மறைந்து, இன்று சற்று அங்கொன்னும் இங்கொன்னுமாய்க் காணப்படுகிறது. படித்தவர்கள் பெருகி வரும் இந்நாளில் இந்தப் பலியிடும் முறை முழுவதும் மறையலாம்.