Monday, December 30, 2013

அனுபவ முத்திரைகள்: நான் வாழ்வில் கண்ட மனிதர்கள் ... வாத்தியாரம்மா...!...

அனுபவ முத்திரைகள்: நான் வாழ்வில் கண்ட மனிதர்கள் ... வாத்தியாரம்மா...!...: நான் வாழ்வில் கண்ட மனிதர்கள் ... வாத்தியாரம்மா...! பூர்வ ஜென்ம பந்தம்.  ஆமாம் , இவர் கணவர் பஞ்சாயத்துப் பள்ளியில் வாத்தியார் வேலை பார்த்தத...
நான் வாழ்வில் கண்ட மனிதர்கள் ... வாத்தியாரம்மா...! பூர்வ ஜென்ம பந்தம். 


ஆமாம் , இவர் கணவர் பஞ்சாயத்துப் பள்ளியில் வாத்தியார் வேலை பார்த்ததால் இவரையும் நாங்கள் வாத்தியாரம்மா என்றே அழைப்போம். பிறப்பால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் .. வாழ்க்கை முறைக்கு எங்கள் ஊர் வந்தவர். எனது மாமனார் ஒற்றைச்சடைபோட்டு இவரது கணவரிடம் ஐந்தாம் வகுப்பு படித்த விபரத்திலிருந்து...பின்னாளில் அவர் பஞ்சாயத்து சேர்மனாகி இவர்தம் மருமகளுக்கு டீச்சர் வேலை போட்டு கொடுத்த காலம் வரை ஊர்சங்கதிகளை, மறைந்தது, மறையாதது ; தெரிந்தது தெரியாதது எல்லாம் வந்த மருமகள்களாகிய எங்களிடம் அக்கு வேறாக ஆணி வேறாக சொல்லி வைப்பார்.. ஒன்றும் தெரியாததுபோல் இருந்து கொள்வார். இத்தனை உரிமையும் அவருக்கு எப்படி வந்தது. என் மாமியார் அவருக்கு நல்ல சிநேகிதமானார் அந்த நாளிலிருந்தே. பல இக்கட்டுகளில் அவருக்கு வாத்தியாரம்மா தன கணவர் இறந்தபிறகும் கூட உறுதுனையானார். நம்பிக்கைக்கு பாத்திரமானார். மருத்துவமனைத் தொடர்பு சங்கதிகள் அன்றைக்கு ஒன்பது பேருக்கு மேலிருந்த குடும்பத்தில் நீண்ட நாட்கள் ஒருவர் மாற்றி ஒருவருக்குவந்தால் எவ்வளவு கஷ்டம். வாத்தியாரம்மாதான் அடுப்படியில் அனைத்தும் பார்த்து கொடுப்பார். அவர்தம் எழுபதாவது வயதிலும் வத்தல், வடாம் எதுவானாலும் சலிக்காமல் முட்டிக்கால் வலியோடு தளர் நடை யானாலும் எட்டி வைத்து நடந்து செயல்படும் அழகை நாங்கள் ரசிப்போம். சமையல் காய்கறிகளோ, உணவுகளோ மீதமாவது பிடிக்காது. அதை தன் கைப்பக்குவத்தால் மாற்றி வித்தியாச உணவு படைப்பதில் வல்லவர். கோலங்கள் விதம் விதமாகப் போடுவதில் வல்லவர். பொங்கல் வந்தால் இவர் போடும் கோலங்கள் சாணி மெழுகிய அடுப்படியிலிருந்து வாசல் வரை பிரசித்தம். ஆயில் பேயிண்டில் எங்கள் பூஜை அறையில் இவர்போட்ட கோலத்தை அழிக்க மனமில்லாது இன்னும் வைத்துள்ளேன்.

வளர்ந்த உருவம், கருத்த தேகம், வெள்ளை ரவிக்கை ,தே உடுத்தும் தேவகிரி புடவையோடு சுருண்ட கேசத்தை நேர்த்தியாகக் கொண்டையிட்டு ,அந்தக் காதில் பளிச்சிடும் ஏழு கல்லுத் தோடு சகிதமாய் இருப்பதை நாங்கள்...பார்த்துவிட்டு..இப்பவே நீங்க இப்படியிருந்தா வயசில எப்படி இருக்கமாட்டீங்க ...என்று சொல்லி சிரிக்கையில் ..சற்று நாணியே..’ எத்தனை பேரு பார்த்து நிற்பானுங்க ..போடா கம்மனாட்டி...ருவன். அதெல்லாம் தனத்தம்மாகிட்ட நடக்குமா...! ‘ சொல்லி பெருமை கொள்வார். இரண்டு மகன்கள் குடும்பமும் நன்கு இருக்கையில் அவர்கள் கூட இருப்பதில்லை. எங்க வீட்டில் தான் இருப்பார்..ஒரு வித்தியாசமான முறை என்னவென்றால்...மாதம் பூராவும் எந்த மகனையாவது, மருமகளையாவது திட்டிக் கொண்டும் சபித்துக் கொண்டும் இருப்பவர், அந்த முதல்தேதி பென்ஷன் பணம் வந்ததையும், தான் சீட்டுபோட்டு கிடைத்த பணத்தையும் முதல் வேலையாக மகன் கையில் கொடுத்துவிட்டுதான் வருவார்.

இதில் கண்ணாடி மாட்டி தினம் தினத்தந்தி பேப்பரை படிக்கும் அழகே தனி...புதிது புதிதாக வந்த நலத்திட்டங்களை தன்னைப் போன்றே தனித்திருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்லி ...கலெக்டர் ஆபீஸ் தாசில்தார் ஆபீஸ் என்றெல்லாம் அழைத்துச் சென்று பென்ஷன் வாங்க ஏற்பாடு செய்து புண்ணியம் கட்டிக் கொண்டார். நான் அதிகம் அவர் அருகாமையில் இருந்துள்ளேன். கால்வலி, தலை வலி, மூச்சுக்குத்து என்று உடல் நலக்குறைவிற்கு தனக்குத்தானே கைப்பக்குவமாய் வைத்தியம் பண்ணிக் கொள்வார்......ஒருமுறை தோள்பட்டை, முதுகு வலியால் துடித்தபோது அவர் வேண்டாம் என்று சொன்னதை மீறி நான் நன்கு பிடித்துவிட்டு சுகப்படுத்த பெரிய இடத்துப் புள்ள எனக்கு பிடிச்சுவிடரையேம்மா என்று மனம் நெகிழ்ந்தார்... நான் இதில் என்னம்மா... அத்தை முதற்கொண்டு எங்கள்வரை என்னென்ன கவனம் வைக்கிறீர்கள் எங்கள் மீது என்று சொல்லிடுவேன். பிறகு ஒரு சங்கதி என் மனதை வருத்துவது.. என்னவென்றால்... மனிதர்க்கு நாற்பதில் நாய்குணம் என்பார்கள் . எங்கள் அத்தை விஷயத்தில் நான் கண்டேன்.. சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம்... சனியனே... மூதேவி... இது எங்க போச்சு ... ? ...அதுதான் மருமக சோறு போடாம எடுத்து சாத்தராளுக.. வரதெல்லாம் மகனுகிட்ட கொடுத்துட்டு மூதேவி முடியலைனா இங்க வரது... என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். என் மாமனார் இவற்றை தாங்க முடியாமல் மனசுக்கு பிடிச்சிருந்தா அதை உடன் வைத்துக் கொள்... அல்லது அது மகனிடம் செல்லட்டும் என்பார். ஒரு நாள் காது பொறுக்கமாட்டாமல் அவர்களை வந்து அழைத்துப் போகச் சொல்லிவிட்டார். தன் எண்பத்தைந்தாவது வயதில் அந்த அம்மாள் அப்போதும் எங்கள் அத்தையிடம் பணம் கொஞ்சம் வைத்திருக்கச் சொல்லி கொடுத்துவிட்டு சென்றது. ஆனால் மகனோடு இல்லை. தனியாக ஒரு வலசில் சிறிய அறை ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடையில் உணவு வாங்கி காலம் தள்ளியது.

தொண்ணூற்றிரண்டு வயது ஆகும்போது எங்கள் அத்தைய வரச்சொல்லி அடுத்தடுத்து ஆட்கள் வந்தனர். உயிர்போகாமல் இருபது நாட்களாய் இழுத்துக் கொண்டிருந்தது. ஒருநாள் எங்களிடம் சொல்லிக் கொண்டு எங்கள் அத்தை சென்றார்... அங்கு அது ‘ வா தனம்...என்று சொல்வதற் கூட முடியாது கண்களில் நீர்கசிய ஜாடையில் சொல்ல இவர் சிறிது பால் ... அவர் வாயில் ஊற்ற உயிர் பிரிந்தது.. அத்தையின் கையில் தான் கடைசித் தண்ணி இறங்கனும் என்ற வைராக்கியம்.... அந்த அம்மாவுக்கு... இது அவர்களுக்குள் பல்லாண்டு வந்த நட்பின் உறவுக்கு மேலுள்ள ஒரு பந்தம்தானே... அடிக்கடி என் அத்தை சொல்லுவார் ,மனம் உருகுவார் ... எனக்கும் வாத்தியாரம்மாவிற்கும் ஏதோ பூர்வஜன்மத்துப் பந்தம் உள்ளது என்று... இவரிடம் இருந்த வாத்தியாரம்மா பணம் ... அவர்தம் இறுதிச் செலவுக்கே ஆனது... யார் கையையும் எதிர்பாராத அவரது வைராக்கியம் அன்று என் மனதில் ஆழமாய்ப் பதிந்தது. இன்று எங்கள் அத்தை சொன்ன பூர்வ ஜென்மத்து பந்தம்... அதன் அர்த்தம் விளங்குகிறது. சிலர் வாழ்வில் இதுபோன்ற நட்புகள் உறவைத் தாண்டிய நிலையில் அமையவே செய்கின்றன.... சாகா வரம் பெற்ற உணர்வுகள்.. இடையில் எங்கள் மனதிலும் அது வாழ்கிறதே !


கோதை தனபாலன்.