Wednesday, November 30, 2011

சீரடி சாய் பாபா

பொதுவாக எனக்கு துறவிகள் செயல்பாடுகள் மீது அவ்வளவாக ஈடுபாடு இராது.சித்தர்கள் மீது ஒரு தனி அபிமானம் உண்டு. அந்த வரிசையில் ரமணர்,வள்ளலார் இந்த இருவர் மீதிலும் பக்தி கலந்த மரியாதை இருக்கும். இப்படி நான் பேசுவதால் இறைவன் என்ற ஒரு மாபெரும் சக்தியை நம்பாதவள் என்ற அர்த்தம் கிடையாது.தெய்வங்களை வணங்க பிரியப்படுபவள்.சன்னதியில் நின்றால் என்ன வேண்டலாம் என்று குழம்புவேன் .மொத்தத்தில் 'எல்லோரையும் நன்றாக வை.உன்னை அன்றி எதுவும் நிகழாது .எங்களுக்கு எது நல்லது என்று   நீயே மனம் கோணாது தெரிவு செய்...'....மனசுக்குள் சொல்லிவிட்டு வந்து விடுவேன்.  எப்படி பட்ட கஷ்டத்திலும் இதே வேண்டுதல் தான் அவன் முன் வைப்பேன்.
இப்படி இருக்கையில் சத்யா சாய்பாபா பற்றி கேள்விப்படும்போது அவர் புட்டபர்த்தியில்  ஏற்படுத்திய இலவச மருத்துவம் மனதை கவர்ந்தது.புத்தகங்களும் படித்து பார்த்தேன். பின் மெதுவாக சிலர் சீரடி சாய்பாபாவை பற்றி பேசுவது அடிக்கடி என் கவனத்தை ஈர்த்தது. மதுரையிலும் அவருக்கு கோயில் எழுப்பி உள்ளதை அறிய நேர்ந்தது.போனவாரமும் சென்றுவந்தேன் . அதற்கு  பின்னரே இதை எழுதுகிறேன்.
அவரை தரிசித்து ,அங்குள்ள வாசகங்களை படித்தேன்.முருக தெய்வம் சொல்வது போல் 'யாமிருக்க பயமேன்' என்றிருந்தது, பின்னர் இருபக்கத்திலும்
'நம்பிக்கை'....' பொறுமை' வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. உண்மைதானே..நம்பிக்கை மட்டும் நாம் வைத்தல் போதுமானதல்ல....
 கைகூடும் காலம் வரை பொறுமை கைப்பிடித்தல் அவசியம் அன்றோ? பொறுத்தார் பூமியாள்வாரன்றோ?
பிறகு சுற்று பிரகாரம் வருகையில் ஒரு அடுக்கில் தீமூட்டி எரிந்து கொண்டிருந்தது. அதன் விளக்கம் ‘இங்கே உன் பாவங்கள் பொசுக்கப்படுகின்றன, அந்த சாம்பலே உனக்கு பிரசாதமாய் திரு நீறாய் அளிக்கப்படுகிறது’...இந்த உண்மை புரிந்து கொள்ளக்கூடியதே. சைவசித் தாந்தம் இதைத்தானே சொல்கிறது. மேலும் தொடர்ந்து படித்த ஒரு வாசகம் என்னை சற்று நேரம் சிந்திக்க வைத்துவிட்டது.
‘  நீ எப்பொழுது அழைத்தாலும் உன்னை இறைவனிடம் சேர்க்க வழித்துணையாய் நான் வருவேன்,மறைந்தேன் என எண்ண வேண்டாம்’
இதுகா றும் இப்படி எந்த ஞானியும் சொன்னதாக நான் அறிந்ததில்லை. ஏதோ ஒன்று என் மனதில் ஆழமாய் புரியதலைப்பட்டது. மனிதனோடுமனிதனாகவே
  நம்மை இறைவனிடம் அழைத்து செல்லக்கூடிய உயரிய சக்தி அவருள் எந்தக்காலமும் உதயமான வண்ணமே இருக்கும் என்பதுதான் அது. மனம் நெகிழ்வுற்றது. வள்ளலார்,'அன்பேசிவம்’ என்று கூறி,தீ என்றும் அணையாது மூட்டப்பட்டு அனைவரது பசி தீர்க்கும்  வழிவகை செய்தார்.
 இவர் இறைவனை மறவாதிருக்கும் வழி காண்பிக்கிறார்..   நன்றி பெருக்குடன் இதை எழுதிவிட்டேன்....



 கோதைதனபாலன்






Sunday, October 2, 2011

அனுபவ முத்திரைகள்: பெருமாள் சங்கதி

அனுபவ முத்திரைகள்: பெருமாள் சங்கதி: மதுரையில் சித்திரை திருவிழா வைபவம் யாவரும் அறிந்ததே .இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ராமநாதபுற மாவட்டத்திலிருந்தும் தங்கள் விளைச்சலை சுமந்து...

பெருமாள் சங்கதி

மதுரையில் சித்திரை திருவிழா வைபவம் யாவரும் அறிந்ததே .இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் ராமநாதபுற மாவட்டத்திலிருந்தும் தங்கள் விளைச்சலை சுமந்து எடுத்து வந்து அழகருக்கு காணிக்கையாக்கி நாலு நாள் இருந்து செல்வர். சர்க்கரை வைத்து சொம்பில் தாங்களே தீபம் காட்டி வணங் குவாரும் உண்டு.  நீர் பாய்ச்சி வழி நெடுக ,வேஷம் பல புனைந்து ஆடிச்செல்வாரும் உண்டு. வர்ணிப்பு பாடல்கள் பல தலைமுறையாய் பாடி போற்றி வணங்குவர்  பலர்.ஊருக்குள் சாமீ பவனி வருகையில் மண்டபபடி வைத்து மரியாதை பெற்று அன்ன மிடுவர் பலர்.ஊருக்கு வெளியில் சிற்சில இடங்களில் சாமீ தரிசனம் செய்துஅன்னதானம் பன்னுவாரும் உண்டு.இத்தனைக்கும் இடையே பெரிய பெரிய உண்டியல்கள் வரிசையாக வந்து செல்லும்.இதில் விழும் காணிக்கைகள் அனைத்தும் அந்த அழகனையே சேரும். இவை யாவும் வைகையின் வடகரையில் நடக்கும் நிகழ்வுகள்.

தரிசனம் செய்வோர் எல்லோரும் அந்த உண்டியலில் பிரத்யேகமாக காசு காணிக்கை அளிப்பார்.நானும் ஊருக்கு வந்த புதிதில் இவையெல்லாம் புதிய பார்வையில் புரிந்து மனமகிழ்ச்சிஅடைவேன்.உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது வீட்டார் நாலனாவோ எட்டனாவோதான் கொடுப்பார். கூடுதலாகத்தான் போட்டால் என்ன, வருடம் ஒருமுறைதானே திருவிழா என்று அவர்களிடம் அங்கலாயிப்பேன் .இப்படியே சில வருடங்கள் ஓடியது.  வெளியூர் வாசம் புரிந்து மறுபடியும் ஊர் வந்து சேர்ந்தேன்.அன்று அதே திருவிவிழா .மனம் பிரகாசத்துடன் அழகனை தரிசிக்க செல்கிறேன். இந்த தடவை நான் யாரிடமும் வாங்கி செலவழிக்க வேண்டியதில்லை .நம் விருப்பம் போல் காணிக்கை செலுத்தவே என் மனம் மேலோங்கி நின்றது.அழகரும் வந்தார். நல்ல அருமையான தரிசனம்.பிரசாதங்கள் விரும்பியபடி கிடைத்தது.அனைவர் மனதும் குளிர்ந்தது என்றால் மிகையாகாது. காணிக்கை செலுத்த ஐம்பது ரூபாய் எடுத்துக் கொண்டு வண்டி அருகே செல்ல யத்தனிக்கிறேன்..அந்தோ எங்கேயும் அந்த வண்டி கண்ணில் படவே இல்லை.வரிசை வரிசையாய் நின்று நிதானித்து வரும் வண்டிகள் வந்திருந்தன...ஆனால் என் கண்ணில் ஒருமணி நேரம் தேடியும்..........படவே இல்லை. மனம் நொந்தேனே ஒழிய காணிக்கை செலுத்த முடியாது வாளாவிருந்தேன்.......மாயன் செய்த லீலைதான்...இது.   வீடு திரும்பிய என் மனதில் பரவசம் மறைந்து....குழப்பமான வேதனையே எஞ்சியிருந்தது.
விடுவேனா......எங்களது பூஜை அறையில் உண்டியலில் அவனது காணிக்கையாக செலுத்திவிட்டேன்.   அதுசமயம் தான் ஒரு விஷயம் விளங்கியது. நாம் இனிமேல் குறிப்பாக இந்த பெருமாளை தரிசிக்கும் போது 
நான் ஒரு பிச்சைக்காரி என்ற நினைவிலேதான் இருக்க வேண்டும். மாறி அதை செய்வோம் இதை செய்வோம் என்று குறிப்பாக இறுமாப்பில் இருந்தால் அவன் அதை ஏற்றுகொள்ள மாட்டான்.நான் இறுமாப்பில் செய்யாவிட்டாலும் ,நம்மை தரிசனம் பண்ண வைப்பதே அவன் மனம் வைத்தால்தான் உண்டு என்று புரிந்து கொண்டு ஒரு பயம் கலந்த பக்தியையே அவனிடம் செலுத்தி வருகிறேன். இறுதியில் இதுதான், தான் என்ற அகந்தையை என்னுள் படிய விடாமல் செய்துவிட்டது என்ற உண்மை புரிய என்னுள் நிரந்தர பரவசத்துடன் அந்த அழகனை வணங்கிச் செல்கிறேன். 



கோதைதனபாலன் 






  























Wednesday, September 21, 2011

யதார்த்த வாழ்வில் ஒரு ஆன்மீக உணர்வு.

  ஆன்மீகம் என்பது நாம் புரிந்து கொள்ள முடியாத பெரிய விஷயம் அல்ல. யதார்த்த வாழ்வில் மனதார இறைவனை அவன் மகிமையை நினைத்து விட்டாலே போதும் தானாகவே வந்து நமக்கு பலவற்றையும் புரிய வைப்பான்.பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு நேர்ந்த அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து முத்திரையென தங்கள் நினைவில் பதிக்க விழைகிறேன்.     இருமாத கடுமையான சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வொரு மாலை வேளையிலும் தோழியருடன் காலாற நடை பயிலும் பழக்கம் ஏற்பட்டது.  அவ்வாறிருக்கையில் ஒருநாள் வழியில் பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிடுவோம். பொதுவாக என்னிடம் பிரார்த்தனை வழிமுறை பழக்கங்கள் எதுவும் என்னிடம் இருந்ததில்லை. அன்றொரு நாள் பெண்மணிகள் பலரும் ஒரு டைரி வைத்துக்கொண்டு அதில் எழுதப்பட்ட பாடல்களை வெகு நேர்த்தியாகவும் பக்திச்சுவையுடனும் பாடக்கண்டேன். பின்னர் ஒரு ஈர்ப்புடன் அந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டேன்.என் மனதில் ஒருநாள் இப்பாடல்களை எல்லாம் தொகுத்து கையடக்கப் பிரதிகளாக அச்சு வார்த்துக் கொடுத்தால் என்ன என்று தோன்ற சக தோழியும் என்னுடன் அதில் பகிர்ந்துகொள்ள விழைந்து இருவரும் குறித்த ஒரு பெண்மணியிடம் அர்ச்சகர் மூலமாக டைரியை கேட்டோம். அதற்கு அப்பெண்மணி சொன்னது 'சும்மா பத்து புத்தகம் அடித்துவிட்டு டைரி தருவதாயிருந்தால் கொடுக்க மாட்டேன் ஐம்பது என்றால் சரி ' என்று சொல்ல மனதில் அடியானாலும் சொன்ன விஷயம் சரி என்றுணர்ந்து என் கணவரிடம் அச்சடிக்கும் பொறுப்பை விட எண்ணினேன். அவர் தனக்கு இதுவிஷயம் நுணுக்கமாய் வராது என்று தனக்குத் தெரிந்த பக்தர் ஒருவரிடம் பொறுப்பைவிட அவரிடம் நான் எழுதி வைத்திருந்த பாடல்களை கொடுத்தனுப்பினேன். சென்றவர் அச்சகத்திலிருந்தே தொலைபேசியில் ஐந்நுறு பிரதி என்றால்தான் அடிக்க முடியும் என்று சொல்ல ,ஒத்துக் கொண்டேன்.பிரதிகள் வாங்கும்பொழுது  அவற்றிற்கான செலவு தொகை கொடுக்கப்போக அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் .மாறாக, 
இருனுற்று ஐம்பது பிரதிகளை பிரியமாக எடுத்துக்கொண்டார். மறுநாள் கோயிலில் அர்ச்சகரிடம் நுறு கொடுத்து கொடுக்கச் செய்ய போதவில்லை.மீதி உள்ளவற்றையும் சகதோழியுடன் சேர்ந்து கொடுக்கச் செய்தோம்.அவர் தம் பங்கு பணம் எவ்வளவுஎன்று கட்டாயப்படுத்த அடித்துக் கொடுத்தவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.அவர் சொன்ன பதில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; பிரமிப்பானது. அச்சகத்தாரே இது நற்காரியமென தாங்களே பொறுப்பெடுத்துக் கொண்டுவிட்டதாகத் தெரிவித்தார். நானும் எனது தோழியும் இறைவனது மகிமையை நினைத்து மலைத்ததுதான் மிச்சம்.  ஆக மனதார ஆசைப்பட்டது ஒன்றுதான் நாங்கள் செய்தது ....மீதமெல்லாம் இறைவன் நடத்தியது. இதுவும் ஆன்மீக உணர்வின் தாக்கம்தானே.


  கோதைதனபாலன்  


தன்னைத் தோண்டி ஞானம்  காண்பதுவும் ஒரு நல்ல அனுபவமே.


 நமது எண்ண உயர்வுகளும் கோபுரம் போன்ற உயர்தர தன்மை ஒத்திருக்க வேண்டும்.